Category: ஆன்மிகக் கதைகள்

ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்

Tamil-Daily-News-Paper_68822878600
கங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான். ராமன், சீதை, லட்சுமணனை சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது!

படகில் அன்றைய தினம் நாலைந்த புதிய நபர்கள் வந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன், குகனிடம் பேச்சுக் கொடுத்தான்.

‘‘அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றன. நீ என்னடாவென்றால் இங்கே படகில் துடுப்பு இழுத்துக் கொண்டிருக்கிறாயே! ஏன், உன்னை ராமர் அழைக்கவில்லையா? நீ அந்த வைபவத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவனா?’’ என்றான்.

குகன் அமைதியாகச் சொன்னான். ‘‘ஐயா! ராமபிரானுக்கு என் நினைவு வராதிருக்குமா? ‘உன்னோடு சேர்த்து ஐவரானோம்’ என்று என்னைத் தன்னுடைய நான்காவது தம்பியாக பாவித்தாரே… அவருக்கா என்னை மறக்கும்?’’ நெகிழ்ச்சியுடன் சொன்னான்.

‘‘அப்படியென்றால் ஏன் உனக்கு அழைப்பு விடுக்கவில்லை?’’

‘‘பொதுவாக ஒரு திருமணம், ஒரு விசேஷம் என்றால் நெருங்கினவர்களுக்கெல்லாம் ஒரு சில பொறுப்புகளைக் கொடுத்து நிறைவேற்றச் சொல்வார்கள் இல்லையா, அதுபோல எனக்கும் ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் மக்களை
அக்கரையில் இருந்து படகில் அழைத்துவரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தின்போது இதுபோன்ற பொறுப்பை நிர்வகிக்கும் ஒருவரால் மணமேடைக்குச் சென்று திருமணத்தைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். அதுபோலத்தான் எனக்கும். நான் மானசீகமாக ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கிறேன். என் ராமர் என்னைப் பார்க்கிறார். நட்புடன் புன்னகைக்கிறார். ‘சாப்பிட்டு விட்டு வெகு
மதிகளை வாங்கிச் செல்’ என்று பாசத்துடன் சைகை செய்கிறார். அந்த நிறைவை நான் இங்கேயே பெற்றுவிடுகிறேன். வேறு என்ன
வேண்டும் எனக்கு?’’

அந்த இளைஞன் மட்டுமின்றி, பயணித்த அனைவருக்குமே குகனுடைய பதிலால்
கண்களில் நீர் திரண்டது.

ஆன்மிகக் கதைகள் – கலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம்


பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் எழுந்தருள்வதை சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்தின் மனக் கண்களில் நிறுத்தினார்.

‘‘என் பிரிய ராஜனே, அப்போது கிருஷ்ணரின் தேகம் புகை சூழா அக்கினிபோல ஜொலித்தது. தேகத்திலிருந்து பரவிய ஒளி, எண் திக்கையும் பிரகாசப்படுத்தியது. பவழம் போன்ற சிவந்த உள்ளங்கால். முத்துகளைப் பதித்தாற்போல நகங்கள். அழகுக்கு அழகு செய்யும் பீதாம்பரம். மேகலை எனும் ரத்தின ஆபரணங்கள் கோர்த்த தங்க அரைஞாண் இடுப்பை அலங்கரித்தது. மெல்லிய ஓடையாக, ஆலிலைபோல மென்மையான திருவயிறு.

விசாலமான மார்பு, அதில் உறைந்த தாயார். பஞ்சவர்ண புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட வைஜெயந்தி எனும் மாலை, பகவானின் கழுத்திலிருந்து மேனியில் படர்ந்து அசைந்தாடியது. பச்சைப் பசேலென்று துளசி மாலையின் சுகந்தமும் மார்புச் சந்தனம் பரப்பிய நறுமணமும் அந்தப் பகுதியையே கமழ வைத்தன.

கழுத்தில் தொங்கும் கௌஸ்துபம் என்ற சிறு மணியும் தோள் வளையங்களும் திண்மையான புஜங்களிலே கங்கணங்களும் கம்பீரத்தை கூட்டின. நீண்ட விரல்களுக்கு மெருகூட்டின மோதிரங்கள். சுருண்ட கேசங்கள் தோளில் புரள, பிரகாசமான முகத்தையும் அங்கும் இங்கும் அலையும் தாமரை போன்ற கண்களையும் அவை பொழிவிக்கும் கருணையையும் விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை! தீர்க்கமான நாசியும் கோவைப் பழ உதடுகளும் விசாலமான நெற்றியில் துலங்கும் கஸ்தூரி திலகமும் காதுகளில் கிணுகிணுக்கும் மகர குண்டலங்களும் சிரசில் ஜொலிக்கும் ரத்தின கிரீடங்களும் வெறும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட எழில் கோலம் காட்டின. சதுர் புஜங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை என ஏந்தி நிற்கும் கம்பீர தோற்றத்தை, அந்த மங்கள மூர்த்தியை, ஜரன் எனும் வேடன் கைகூப்பி தரிசித்து, திகைத்து கிடந்தான். மாபெரும் போர்களில் அநாயசமாக எதிரிகளை துவம்சம் செய்த பகவான் இங்கு என் சிறு அம்புக்கு கட்டுப்படுகிறாரே என்று கருணையின் விந்தையை எண்ணி கண்ணீர் விட்டான்.

பகவான் அவனுக்கு பாகவத தர்மங்கள் அனைத்தையும் உபதேசித்தார். நிறைவாக, ‘‘ஒன்றும் கவலைப்படாதே ஜரா. நான் விரும்பியதைத்தான் நீ செய்திருக்கிறாய். மகா புண்ணியசாலிகள் சென்று சேரும் சொர்க்க லோகத்திற்கு நீ போவாய்’’ என்று ஆசி அளித்தார்.

ஜரன் விண்ணுலகம் ஏகினான். அங்கே பிரம்மா, சிவன், பார்வதி, இந்திரன் மற்றும் தேவர்கள், மாமுனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யட்சகர்கள், கின்னரர்கள் என அனைவரும் குழுமியிருந்தனர். பகவான் வைகுண்டத்திற்கு எழுந்தருளும் திவ்ய காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தனர். யோகிகள் யோக தாரணையாக தம் சரீரத்தை, தாமே எரித்து விடுவர். ஆனால், பகவானோ மங்களமான திருமேனியோடே வைகுண்டத்திற்கு புறப்பட்டார். வானத்தில் துந்துபிகள் முழங்கின. மலர்கள் மாரியாகப் பொழிந்தன. சத்தியம், தர்மம், தைரியம், கீர்த்தி, ஸ்ரீதேவி ஆகிய பெருஞ் சக்திகள் பகவானை தொடர்ந்தன. பிரம்மாவும் ஈசனும் பகவானின் இந்த யோகப் பிரபாவத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பிறகு அவரவர் லோகங்களுக்குச் சென்றனர்.

ஒரு நடிகன் பற்பல வேஷங்களை போட்டுக் கொண்டு நடித்தாலும் தான் யார் என்பதை மறக்காதிருப்பான். அதுபோல ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தது முதல் வைகுண்டத்திற்கு எழுந்தருளியது வரை எல்லாவற்றையுமே லீலைகளாக நிகழ்த்தி விட்டார். இன்னொரு முக்கிய விஷயம். ஆத்ம நிஷ்டர்களான ஞானிகளுக்கு அவர் முன் உதாரணமாக திகழ்ந்தார். அதாவது, தான் எந்த உடலை எடுத்தாலும் இந்த உடல் தான் அல்ல; தான் என்பது அந்த ஆத்மாவே என்று உடலின் மீது பற்றை அறுத்தல் வேண்டும் என்று ஞானிகளுக்கு காட்டிவிட்டுச் சென்றார்.

கிருஷ்ணர் வைகுண்டத்திற்குச் சென்றார் என்று கேள்வியுற்றதும் துவாரகை நகரமே கண்ணீர் விட்டு அழுதது. தேவகி, ரோகிணி, வசுதேவர் போன்றோர் மூர்ச்சையுற்றனர். கிருஷ்ணரின் பட்டத்தரசிகள் தியானத்தில் ஆழ்ந்தனர். பலர் யோகாக்னி மூட்டி, அக்கினியில் பிரவேசித்தார்கள். பாண்டவர்கள் இந்தத் துக்கம் தாங்காமல் அலறித் துடித்தார்கள்.

அர்ஜுனன் பைத்தியம் பிடித்தவன்போல் அலைந்தான். ‘‘இருக்கவே இருக்காது. என் நண்பன் கிருஷ்ணன் எங்கேயும் போகவில்லை. நாளையே வந்து விடுவான்’’ என்று அரற்றினான். மற்ற சகோதரர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக அவனைத் தேற்றினர். அர்ஜுனனுக்கு கீதையின் ஒவ்வொரு ஸ்லோகமும் நினைவிற்கு வந்தது. மெல்ல அவனுக்குள் தெளிவு பிறந்தது.

வேறொரு பக்கம் துவாரகையை ஆழிப் பேரலைகள் சூழ்ந்து நொடிப் பொழுதில் மூழ்கடித்தது. அர்ஜுனன் எல்லோரையும் அழைத்துக்கொண்டு இந்திர பிரஸ்தம் என்று அழைக்கப்பட்ட பாரத தலைநகருக்கு வந்தான். எல்லோருடைய நீத்தார் கடன்களையும் பாண்டவர்கள் முன்நின்று முடித்து வைத்தனர். பகவான் வைகுண்டம் சென்ற அந்தக் கணத்தில் கலியுகம் தொடங்கியது என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.

சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்துக்கு கலி காலத்தினுடைய ஆரம்பம் முதல் முடிவு வரை அதன் தன்மைகளை எடுத்துக் கூறினார்.
கலியில் எத்தனை மன்னர்கள் ஆள்வார்கள் என்றும் அதர்மம் எப்படி தழைத்தோங்கும் என்றும் ஆணித்தரமாக கூறினார். கலிகால மனிதர்களின் சுபாவத்தை அங்குலம் அங்குலமாக விவரித்தார். தோஷங்களின் மொத்த உருவமே கலிகாலம் என்றும் தயவு தாட்சண்யத்துக்கு சற்றும் இடம் கொடுக்காத வகையில் கலி வளரும். பொய், சோம்பல், தூக்கம், ஹிம்சை, துக்கம், பயம் போன்ற சகல தமோ குணங்களையும் கலி புருஷன் பிரதானமாகக் கொண்டு செயல்படுவான். வேத மார்க்கங்களை சீர்குலைக்க பல்வேறு பாஷண்ட மதங்கள் தோன்றும். பிரம்மச்சர்யம், கிரகஸ்த தர்மம், சந்யாச தர்மம் போன்றவை தலைகீழாகும்.

பரீட்சித் மகாராஜனே, கலி வேண்டுமானால் தோஷங்களின் மொத்த உருவமாக இருக்கலாம். மனிதர்கள் மிருகங்கள் ஆகலாம். கிரகஸ்தர்கள் கருமியாகலாம். பிரம்மச்சாரிகளை காமம் பீடிக்கலாம். சந்யாசிகள் பெரும் செல்வத்தைத் தேடி ஓடலாம். ஆனால், கலியுகம் தன்னிடத்தே மிகப்பெரிய குணம் ஒன்றை கொண்டிருக்கிறது. அதுதான், பகவானின் நாமங்களைச் சொல்வது.  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திவ்ய ரூபத்தை தரிசிக்காது கூட இருக்கலாம். ஆனால் பகவானின் திவ்ய நாமங்களை கலியுகத்தில் உச்சரிப்பவன் உத்தம கதியை அடைந்து விடுகிறான். நாவினால் நாமங்களை சொல்லச் சொல்ல கிருஷ்ணர் ஓடிவந்து விடுகிறார். எல்லா யுகத்தையும் விட, கலியுகம் பகவானை அடைய எளிய மார்க்கத்தைக் கொண்டிருக்கிறது’’ என்று சுகாச்சாரியார் பரீட்சித்துக்கு கலியுகத்தின் பெருமைகளை ஆனந்தமாக உபதேசித்தார்.

இங்கு பாகவதத்தின் தொடக்கமான சில விஷயங்களை நினைவுகூற வேண்டும். சமீகர் என்கிற முனிவர், பரீட்சித்தை தட்சகன் என்கிற நாகம் தீண்டி இறக்கட்டும் என்று சாபமிட்டார். ஏனெனில், சமீகர் தியானம் செய்யும்பொழுது விளையாட்டாக பாம்பை மாலையாகப் போட்டவன் அவன். அது எவ்வளவு பெரிய தவறு என்று உடனே உணர்ந்தான். சாப விமோசனத்தைத் தேடி அவன் அலையவில்லை. தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்று யோசித்தான். கலியுகம் தொடங்கியதாலேயே, கலிபுருஷன் தன்னை தீண்டியதாலேயே இப்படியொரு மகாபாவமான செயலை செய்ய நேர்ந்தது என்று உணர்ந்து கண்ணீர் உகுத்தான்.

ஆன்மிகக் கதைகள் – தீமைக்கும் நன்மை செய்!

சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன  இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை.

ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான்.

தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான்.  உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.

பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.

என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின.

அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும்  சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது!

பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது.

ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான்.
கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை.

உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது?  ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான்.

‘‘இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன்.

‘‘அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.

‘‘இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது!

விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார்.

தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள்.

மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது.
மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.

ஆன்மிகக் கதைகள் – ஏன் திறக்கவில்லை சொர்க்கவாசல்?

கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்: ‘‘ஏ அக்கினியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து, சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மச்சாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’

இவ்விதம் முழங்கிய அவர், நெருப்பில் சடாரெனக் குதித்தார். சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார். கதவைத் திறந்துகொண்டு உள்ளிருந்து வந்தான் ஒரு தேவன். ‘‘யார் நீங்கள்? என்ன வேண்டும்?’’ என்று அதட்டினான்.

‘‘நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள்’’ என்றார் முனிவர். தேவன் கடகடவென்று சிரித்தான். ‘‘மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!’’

மந்தபாலர் வியப்படைந்தார். தவ சிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? ‘‘தேவனே! தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது?’’ தேவன் நகைத்தபடிச் சொல்லலானான்: ‘‘மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன்தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒருவருக்கு மக்கட் செல்வம் கிட்டவில்லை என்றால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டால் அதுவும் கூட ஏற்கக் கூடியதே.

ஆனால் எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் சொர்க்கம் புகத் தவம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூணுபவர்களை சொர்க்கம் விரும்புவதில்லை. படைப்பாற்றல் சக்தி அளிக்கப்பட்டும் தர்மநெறிப்படி வாழ்ந்து ஆனால் ஓர் உயிரைக் கூடப் படைக்காமல் சொர்க்கம் புக எண்ணுவது சரியல்ல. உங்களுக்கு இயற்கை வழங்கிய படைப்பாற்றலுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லையே! உங்கள் வாரிசு என பூமியில் யாரையாவது காட்டுங்கள். உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் இப்போதே திறக்கும்.’’

மந்தபாலர் திகைத்தார். இப்படியொரு கோணத்தில் தாம் எண்ணிப் பார்க்கவே இல்லையே என வருந்தினார். தம் தவ ஆற்றலால் தாம் மறுபிறவி எடுத்து தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்தால் அதன் பின் சொர்க்கக் கதவுகள் தமக்குத் திறக்குமல்லவா என்று யோசித்தார். தேவன், ‘‘ஒரு பிறவியின் தவ ஆற்றல் மறுபிறவிக்கும் தொடரும், மறுபிறவியில் அவர் தவம் ஏதும் நிகழ்த்த வேண்டாம், தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்து தம் இனத்தைப் பெருக்க உதவினால் அது போதும்’’ என்று விளக்கம் தந்தான். மந்தபாலர் தன்னை விரைவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாரங்கப் பறவையாக உருமாறும்படி மனத்தில் சங்கல்பம் செய்துகொண்டார். அப்போதுதானே சீக்கிரத்தில் சொர்க்கம் வர முடியும்?

மறுகணம் மாபெரும் காண்டவ வனத்தில் ஒரு மரக்கிளையில் அந்த அழகிய சாரங்கப் பறவை போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. இயற்கையின் நியதிப்படி, அது மறுபிறவி எடுத்த கணத்திலேயே அதன் முற்பிறவி நினைவுகள் மறைந்தன. அதே மரத்தின் கிளையில் சிறகுகளைத் தன் கூரிய அலகால் கோதிக் கொண்டு ஜரிதா என்ற ஒரு சாரங்கி அமர்ந்திருந்தது. அது, தான் அமர்ந்த மரத்தின் இன்னொரு கிளையில் உட்கார்ந்த சாரங்கத்தை வியப்போடு பார்த்தது. ஜரிதாவின் எழிலும் கனிவான பார்வையும் மந்தபால சாரங்கத்தைக் கிறக்கம் கொள்ள வைத்தன. அந்தப் பெண் பறவையிடம் மந்தபால சாரங்கத்திற்குத் தீராக் காதல் தோன்றியது.

மெல்ல மெல்ல அவற்றினிடையே காதல் வளர்ந்தது. அவை இல்லற வாழ்வை மேற்கொண்டு ஒரே கூட்டில் இணைபிரியாமல் வசிக்கலாயின. ஜரிதா நான்கு முட்டைகளை இட்டது. அவற்றை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்குள் அந்த இனிய இல்லற வாழ்வில் ஒரு விபரீதம்! லபிதா என்ற இன்னொரு சாரங்கி மந்தபால சாரங்கனை வட்டமிட்டது. அதனுடைய ஆண்மை நிறைந்த பேரழகு லபிதாவை மயக்கிக் கொள்ளை கொண்டது. லபிதா பறந்து சென்று அதன் அருகே அமர்ந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தது.

‘‘யார் நீ? என்ன தேடுகிறாய்?’’ விசாரித்தது மந்தபாலம்.

‘‘உங்கள் அலகின் வளைவிலும் சிறகுகளின் அடர்த்தியிலும் என்னையறியாமல் என் உள்ளத்தைத் தொலைத்துவிட்டேன். அது இங்கே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று தேடுகிறேன்!’’

லபிதாவின் மயக்கும் கவிதை மொழி மந்தபாலத்தைக் காந்தம் போல் இழுத்தது. தன்னை வட்டமிட்ட லபிதாவின் அழகில் லயித்த மந்தபாலம் தேடிவந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. ஏற்கெனவே மணமாகி ஒரு மனைவியும் தனக்கு உண்டு என்பதையோ மனைவி இப்போது நான்கு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது என்பதையோ நான்கு ஆண் குஞ்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையோ மந்தபாலம் எண்ணிப் பார்க்கவில்லை. காமம் அதன் கண்ணை மறைத்தது.

மனைவி ஜரிதாவிடம் ஏதொன்றும் கூறாமல் ஒருநாள் லபிதாவோடு இணைந்து, விண்ணில் பறந்து, தனியே இல்வாழ்வைத் தொடங்கின.

‘‘அப்பா எங்கே?’’ என்று கேட்டன அப்போது தான் உருப்பெறத் தொடங்கியிருந்த நான்கு ஆண் குஞ்சுகள்.

‘‘உங்கள் அப்பா மனிதர்களைப் பார்த்துக் கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு விட்டார். போகட்டும், நம்மை மறந்தவர்களை நாம் நினைப்பது நம் சுயமரியாதைக்கு அழகல்ல. உங்கள் நால்வருக்கும் நானே இனித் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன். வெளியே சென்று உங்களுக்குத் தேவையான உணவை நானே சம்பாதித்து வருவேன். நான் உணவு பெறுவதற்காகக் கூட்டை விட்டு வெளியே செல்லும்போது மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!’’ என்றது, ஜரிதா. ஆண் குஞ்சுகள் மனம் தேறி தாய்ப்பறவை சொன்னதை ஏற்றுக் கொண்டன.

ஒருநாள் திடீரெனக் காண்டவ வனத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இரண்டாம் மனைவி லபிதாவுடன் சுற்றிக் கொண்டிருந்த மந்தபாலம், நெருப்பைப் பார்த்துத் திகைத்தது. சரிவரச் சிறகு கூட முளைக்காத தன் நான்கு ஆண் குஞ்சுகளும் என்ன பாடுபடுமோ என்று அதன் தந்தை மனத்தில் கவலை எழுந்தது. ‘‘ஏ அக்கினியே! என் நான்கு மகன்களையும் நீ எரிக்காமல் காப்பாற்றுவாயாக!’’ என்று அது மனமாரப் பிரார்த்தனை செய்தது. அதன்முன் அக்கினி பகவான் தோன்றி, ‘‘மந்தபாலமே! உன் முற்பிறப்பில் உன் உடலையே எனக்கு ஆகுதியாக்கினாய். அந்த உன் தியாகத்தை மெச்சி உன் இப்பிறப்பில் உனது ஆண் குஞ்சுகளை நான் ஒன்றும் செய்யமாட்டேன்’’ என வாக்குக் கொடுத்து மறைந்தார்.

இதைக் கண்ட இரண்டாம் மனைவி லபிதா, ‘‘இன்னும் உனக்கு ஜரிதாவிடம் காதல் இருக்கிறது’’ என்று ஊடல்கொண்டு இன்னொரு மரக்கிளையில் தனியே போய் உட்கார்ந்து கொண்டது.

அக்கினியின் வாக்குறுதி பற்றி ஏதும் அறியாத தாய்ப்பறவை ஜரிதாவைக் கலக்கம் கவ்வியது. அக்கினியிடமிருந்து இறகு சரிவர முளைக்காத பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது?

குஞ்சுகள் பயத்தில் நடுநடுங்கின. ‘‘அம்மா! நீங்கள் தப்பித்துப் போங்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருந்தால் வம்சம் விருத்தியாக வாய்ப்புண்டு. நாங்கள் நெருப்பிலேயே மடிந்தாலும் பரவாயில்லை!’’ என்றன.

தாய்ப்பறவை ஜரிதா வேறு வழி
தெரியாமல் அழுதுகொண்டே விண்ணில் சுற்றிக்
கொண்டிருந்தது.

மூத்த ஆண் குஞ்சான ஜரிதாரி, ‘‘வரப்போகும் கஷ்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பவனே புத்திசாலி. அவன் கடவுள் அருளால் கஷ்டத்தைக் கடந்துவிடுவான்!” என்றது. சாரி, ஸ்தம்பமித்திரன், துரோணன் ஆகிய பிற மூன்று குஞ்சுகளும் அதை ஆமோதித்தன. அண்ணனுடன் சேர்ந்து பிரார்த்திக்கத் தொடங்கின. ‘‘அக்கினி பகவானே! நீயே சூரியன். நீயே மழை தருபவன். உன்னாலேயே உயிர்கள் உண்ட உணவு ஜீரணமாகிறது. நாங்கள் இளம் குழந்தைகள். எங்களிடம் இரக்கம் காட்டு. எங்களை அழிக்காதே!’’

இளம் குழந்தைகளின் மழலைப் பிரார்த்தனை அக்கினி பகவானைக் குளிரச் செய்தது. ‘‘உங்கள் தந்தைக்கு வரம் கொடுத்திருக்கிறேன். உங்களை அழிக்கமாட்டேன். உங்களுக்கென்று என்ன வரம் வேண்டும்?’’ என்று வெகு பிரியமாகக் கேட்டார்.

‘‘எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பிரித்த லபிதாவை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் தந்தை எங்களுக்கு வேண்டும்!’’ என்றன அவை.
அக்கினி பகவான் சிரித்துக் கொண்டே ‘‘அப்படியே நடக்கும்’’ என்று சொல்லி படபடத்துப் பாய்ந்தார். அதோடு, தனியே மரக்கிளையில் அமர்ந்திருந்த லபிதாவைப் போகிற போக்கில் அள்ளி விழுங்கிச் சென்றுவிட்டார்!

தாய்ப்பறவை ஜரிதா அக்கினி அடங்கியதும் பாய்ந்தோடி வந்தது. சேதமில்லாமல் தன் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் அவற்றை அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் அரற்றியது.
அப்போது மந்தபாலமும் அங்கே வந்துசேர்ந்தது. மனைவி, பிள்ளைகளைக் கண்டு அழுதது. ஜரிதா கணவனை வெறுப்புடன் நோக்க, பிள்ளைகளோ பாசத்தோடு தங்கள் தந்தையிடம் சென்று அமர்ந்தன.
‘‘இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் தான் அக்கினி பகவானிடம் வரம் கேட்டேன். அத்தோடு அந்த சாகசக்காரி லபிதாவை இப்போது முற்றிலுமாகத் தலைமுழுகி விட்டேன்! என்னை மன்னிக்கக் கூடாதா?’’ என்று உருகியது மந்தபாலம்.
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது ஜரிதா. குழந்தைகளுக்குத் தந்தை முக்கியமல்லவா; திருந்தி மன்னிப்புக் கேட்பவரை ஏற்பதுதான் தர்மமல்லவா என்று சிந்தித்தது. மெல்லப் பறந்துபோய்த் தன் கணவன் அருகில் அது அமர்ந்தபோது குழந்தைகள் அப்போதுதான் முளைக்கத் தொடங்கிய தங்கள் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்து ஆர்ப்பரித்தன. ஜரிதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்த அழகை ரசித்தது மந்தபாலம்.
மேலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த அக்கினி பகவான் சிரித்துக் கொண்டார். முதல் மனைவியின் வாழ்வைக் கெடுக்கும் இரண்டாம் மனைவியை வாழ்க்கை நெருப்பு எரிக்கக் கடவது என்று அவர் விதி வகுத்தார்.
காலப்போக்கில் மந்தபாலம் மூப்படைந்து தளர்ந்து உயிர் விட்டபோது அதன் ஆன்மா சொர்க்கம் நோக்கிச் சென்றது. என்ன ஆச்சரியம்! மந்தபால ஆன்மாவை வரவேற்க சொர்க்கத்தின் கதவுகள் தயாராய்த் திறந்திருந்தன. இரு தேவிகள் அந்த ஆன்மாவை வரவேற்கப் பூரண கும்பத்தோடு காத்திருந்தார்கள். இயல்பிலேயே வழங்கப்பட்ட படைப்பாற்றலுக்கு நியாயம் செய்த மந்தபால ஆன்மா அப்படித்தான் சொர்க்கத்தைச்
சென்றடைந்தது.

(கிளையில் அமர்ந்து குடும்பம் நடத்திய சாரங்கப் பறவை பற்றிய இக்கதை, மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக்கதை!)

ஆன்மிகக் கதைகள் – வளர்ப்புத் தந்தை வால்மீகி


மக்களுக்கு உரிய நீதியே மன்னருக்கும் பொருந்தும் என்ற கருத்தை நிலைநாட்ட, ஸ்ரீராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்பினார். அப்போது கர்ப்பிணியாக இருந்த சீதாபிராட்டி, வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் லவன் என்ற மகனைப் பெற்றாள். ஆசிரமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களைப் போலவே சீதையும் ஆசிரமப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஒருநாள், வால்மீகி முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் சீதை தண்ணீர் கொணரச் சென்றாள். குழந்தை லவனையும் சீதை தன்னுடன் எடுத்துச் சென்றாள். வால்மீகி தியானத்திலிருந்து விழித்து எழுந்தபொழுது, குழந்தையைக் காணாது திடுக்கிட்டார்.

ஆசிரமவாசிகளும் துணுக்குற்றனர். சீதை திரும்புவதற்குள் வால்மீகி, தன்னுடைய தவத்தின் ஆற்றலால், ஒரு தர்ப்பைத் துண்டை லவனைப் போன்ற ஒரு குழந்தையாகச் செய்தார்! சீதை ஆசிரமம் திரும்பினாள்! அவள் கையில் குழந்தை லவன் இருந்தான்! அவனைப் போன்ற மற்றொரு குழந்தை இருந்ததைக் கண்டாள்! நடந்ததை வால்மீகி முனிவர் விளக்கியுரைத்தார். ‘குசம்’ என்ற சொல் தர்ப்பைப் புல்லைக் குறிக்கும். தர்ப்பைப் புல்லிலிருந்து தோன்றிய குழந்தைக்கு, ‘குசன்’ என்று பெயரிட்டார் வால்மீகி. லவனும் குசனும் ஒருதாய் மக்களாகவே ஆசிரமத்தில் வளர்ந்தனர்.

வசிஷ்டர் ஆசிரமத்தில் ராமனும் லட்சுமணனும் சகல கலைகளையும் கற்றனர் அல்லவா? அதுபோல், வால்மீகியின் ஆசிரமத்தில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த லவனும் குசனும் ராமரின் அசுவமேதக் குதிரையை அடக்கிப் பிடித்தனர்! பின்னர், ராமரின் அசுவமேத வேள்விச் சாலையிலேயே ராம கதையைப் பாடி அரங்கேற்றினர் என்பது ராமாயண உத்தர காண்டம் உரைக்கும் செய்தியாகும்.

‘‘இருமன்னர் பெற்றேனோ
வால்மீகரைப் போலே?’’

– என்று இதனைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை குறிப்பிட்டார். வால்மீகி முனிவர் இரண்டு மன்னர்களை, அதாவது கோசல நாட்டு இளவரசர்களான லவ-குசர்களை வளர்த்த பெருமைக்குரியவர் என்பது உள்ளீடு.

இருமாலை ஈந்தவர்

சோழ நாட்டில் பூதங்குடி என்ற தலத்திற்கு அருகில் உள்ள மண்டங்குடி என்ற ஊரில் மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். பெற்றோர் அவருக்கு விப்ரநாராயணர் என்று பெயர் சூட்டினர். விப்ரநாராயணர் திருவரங்கப் பெருமாளிடம் தனி ஈடுபாடு கொண்டார். அங்கு தங்கி, பெரியாழ்வாரைப்போல் மலர் மாலை சமர்ப்பிக்கும் தொண்டு செய்து வந்தார்.

விப்ரநாராயணரின் நந்தவனத்திற்கு வந்த தேவதேவி என்ற நடனமாது அவரிடம் மையல் கொண்டாள். பெருமுயற்சிக்குப் பிறகு தேவதேவி விப்ர நாராயணரை மையலில் சிக்க வைத்தாள். பிராட்டியின் வேண்டுகோளின்படி, உரிய நேரத்தில் நிகழ்த்திய திருவிளையாடல் வழியே பெருமாள் விப்ரநாராயணரை மீண்டும் தன்பால் ஈர்த்தார். விப்ர நாராயணர் மாதர் மையலால் மாதவனை மறந்த குற்றத்தை உணர்ந்து வருந்தினார்.

அக்குற்றத்திற்குப் பரிகாரம் யாதென்று சான்றோர்களிடம் வினவினார், விப்ரநாராயணர். திருமாலடியார்களின் பாதங்கழுவிய புனித நீரே அவருக்கு உயர்வளிக்கும் என்றனர். அவ்வாறே செய்த விப்ரநாராயணர் தொண்டரடிப் பொடியாழ்வாராக உயர்ந்தார். திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார்.
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானுக்குப் பள்ளியெழுச்சி பாடினார். தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கனுக்குப் பள்ளியெழுச்சி பாடினார். தில்லைக் கூத்தனின் இனிய தரிசனம் கிடைக்கப் பெற்றால் மனிதப் பிறவியும் பயனுள்ளதே என்றார் திருநாவுக்கரசர்.

அரங்கனை, ‘அச்சுதா! அமரர் ஏறே!’ என்று அழைத்து, ‘அச்சுவை கிடைக்கப் பெற்றால் இந்திரலோகம் ஆளும் அச்சுவையையும் வேண்டேன்’ என்றார், தொண்டரடிப் பொடியாழ்வார்.
‘இருமாலை ஈந்தேனோ
தொண்டரடிப் பொடியார் போலே?’

-என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் மலர்மாலைத் தொண்டை நினைவு கூர்ந்தார், திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. தொண்டரடிப் பொடியாழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்தார். திருத்துழாய் (துளசி) மற்றும் நறுமண மலர்களைப் பறித்துத் திருமாலுக்கு மாலைகள் கட்டிச் சமர்ப்பித்தார்.
‘இருமாலை’ என்ற சொல் மூன்று விதமாகப் பொருள் தருகிறது:

1. அவர் பெருமாளுக்குப் பூமாலை, பாமாலை என்ற இரண்டு வகையான மாலைகளை ஈந்தார்.
2. துழாய் மாலை, மற்ற மலர் மாலைகள் என்ற இருண்டு வகையான மாலைகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார்.
3. திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற இரண்டு பிரபந்தங்களை இயற்றிப் பெருமாளுக்குப் பாமாலைத் தொண்டு செய்தார்.
திருக்கோளூர்ப் பெண் பிள்ளையின் சிறிய சொற்றொடர்களில் அரிய இலக்கிய நயமும் கருத்தாழமும் பொதிந்துள்ளதைக் காணமுடிகிறது, அல்லவா?

ஆன்மிகக் கதைகள் – பணிப்பெண்ணான பட்டத்து ராணி


அரசரும் அரசியும் வீற்றிருக்க, அந்தக் கோயில் மண்டபத்தில் ஓர் அழகிய, பதியிலார் மனைப் பெண் தேவாரப் பண்ணுக்குப் பதம் படித்து அற்புதமாக நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.  இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசர், ஓர் அருமையான ஜதியில் மெய் சிலிர்த்துப் போய், ‘‘ஹா! ஆஹா! அதி உன்னதம்,’’ என வாய் விட்டுப் பாராட்டி கை தட்டுகிறார். அங்கே மண்டபத்தில் கூடியிருந்த பக்த ஜனக் கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘‘தெய்வ கைங்கர்யத்திற்கே தன்னை அர்ப்பணித்த அடியாளாகிய பதியிலார் மனைப் பெண் பரதம் ஆடினால் இத்தனை ரசிக்கின்ற நீ, உன் மனையாளாகிய அரசியை இதேபோன்று இக்கோயில் ஒன்றிலே ஆட விடுவாயா? அரன் தொண்டே இனி அரசி தொண்டு என்று உன்னால் அறிவிக்க இயலுமா?’’ என ஒலிக்கிறது. கூட்டத்தில் ஒரே பரபரப்பு.

‘‘யார்… யார் இப்படி அநாகரிக  வினாக்கணை தொடுத்தது?’’

ஆலய அதிகாரிகள் ஆவேசம் கொள்கின்றனர். பக்தர் கூட்டத்தில் பதற்றம் பரவுகிறது. ‘‘நான் இல்லை… நீ இல்லை… அவர் இல்லை. அதோ அந்தப் பக்கம் இருந்துதான் குரல் எழுந்தது. இதோ இப்போதுதான் ஒரு பரதேசி கையில் திருவோட்டுடன் மெல்ல நழுவினான். அவனாகத்தான் இருக்கும்…’’ ஆளாளுக்கு ஏதேதோ பேச, ஒவ்வொருவரும் தங்களை நிரபராதி என நிரூபிக்க முயல, ‘பிராகாரம் முழுக்கத் தேடியும் நழுவிய ஆள் அகப்படவில்லை…’ என்று அதற்கு ஒரு மாயா சமாதானம் கற்பிக்க முயல, நொடிக்குள் ஏகப்பட்ட களேபரம்….

‘‘அமைதி… அமைதி…’’ என்ற கம்பீரக் குரல் கேட்டு, அனைவர் தலைகளும் கவனமும் திரும்புகின்றன. அங்கே அரசர் எழுந்து நின்று, ‘‘பக்த மகா ஜனங்களே, அக்குரல் எழுப்பியது யார் என்கிற ஆராய்ச்சி தேவையில்லை. அதை நான் ஈசன் கட்டளையாக ஏற்கிறேன். இன்று… இக்கணம் முதல் என் மனைவி இத்திருவிடைமருதூர், மகாலிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தின் அடிமை; இனி அவள் அரசியல்ல. இந்த ஆலய மண்டபத்திலேயே அவள் பக்தர்களை மகிழ்விக்க ஆடலாம்; தேவாரப்பண் பாடலாம். இதர தேவரடியார் பெண்கள் தங்கியிருக்கும் பதிவிலார் மனை வளாகத்திலேயே அவள் தங்குவாள்.

அதிகாலையில் எழுந்து வந்து, இறைவன்-இறைவி சந்நதிகளை நீர் தெளித்துக் கூட்டிப் பெருக்கிக் கோலமிடுவாள். மலர்கள் பறித்து, மாலை கட்டித் தருவாள். ஆலயம் அளிக்கும் நிவேதனம் பட்டை சாதம்தான் இனி அவள் உணவு’’ எனக் கூறிவிட்டு, எதுவுமே நடவாதது போன்று அமைதியாக நடந்து சென்று விட்டார்.
அரசியாரும் இதை ஏற்பது போன்று மௌனம் சாதித்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ குன்றவில்லை. அரசர் செல்லும் திசை நோக்கி, இருகரம் கூப்பித் தொழுதபடி இருந்தார். கூட்டத்தினருக்கோ அதிர்ச்சி, ஆச்சர்யம். பிரமிப்பு பிடரி பிடித்து உலுக்கிற்று.

‘‘உலகில் யார் செய்யக்கூடும் இச்செயல்! என்ன அரசர் இவர்… என்ன மனிதர் இவர்! யாரோ ஒரு அநாமதேயம்… எங்கிருந்து பேசுகிறான் என்பதே புலப்படாத உளறல் பேச்சுக்கு இவர் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? கட்டிய மனைவியை அதுவும் பட்டத்தரசியைப் போய் தேவரடியார் பெண்களில் ஒருத்தியாக்குவதா? அநீதி… அடுக்கவே அடுக்காது இச்செயல்…!’’ என்று வாய்விட்டே குமுறினர் பலரும். அவர்கள், வரகுண பாண்டியனின் உன்னத உள்ளம், உயரிய சிவபக்தி பற்றி ஏதும் அறியாதவர்கள்.

மணிவாசகப் பெருமானுக்கு அவருடைய அதியற்புத சிவபக்தியை அறியாத நிலையில், தாம் பெருந்தீங்கு விளைவித்து விட்டதாக எண்ணி, நெடு நாட்கள் உளம் நலிந்து கிடந்தார், பாண்டிய மன்னர் வரகுணர். இந்த சமயத்தில்தான் ஒருநாள் அவர், வைகைக் கரை வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்று திரும்பும் அந்தி வேளையில், ஒரு வன்னி மரத்தினடியில் சோர்வுடன் சரிந்து கிடந்த கிழ வேதியன் மீது புரவி ஏறி மிதிக்கக் காரணமாய் இருந்து விட்டார். அவர் அறியாது நிகழ்ந்த செயல்தான் அது. புரவியின் கால்கள் அந்த வயது முதிர்ந்த வேதியனின் உடலில் படக் கூடாத இடத்தில் வேகமாகப் பதிந்து விட்டதால், பயங்கர அலறல் எழுப்பி, அரை நொடியில் உயிரை விட்டு விட்டார் அவர்.

புரவியிலிருந்து கீழே குதித்த வரகுண பாண்டியர், நெற்றி, மார்பு, புஜங்களில் விபூதிக் கீற்றுகள் ஒளிர, ஆவி துறந்து கிடந்த அம்முதியவரின் உடல் கண்டு துடித்துப் போனார். ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு செய்து, அவ்வேதியர் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்க ஆணை பிறப்பித்தார். சகலமும் செய்த பிறகும் அரசரின் உள்ளத்தை வேதனை வாட்டியது. கண்களை எப்போது மூடினாலும், சிவச் சின்னங்களோடு வாய் பிளந்து மல்லாந்து கிடந்த அம்முதியவரின் முகமும் உடலும்தான் தோன்றின. காதுகளில் அவர் எழுப்பிய இறுதி அலறல், உயிரைப் பிடுங்கியெறிவதுபோல் ஒலித்தது.

‘ஏன்… ஏன் இத்தனை சிவ அபசாரம் என் வாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது! நானும் என் முன்னோர்கள் காட்டிய வழியில், குறைவற்ற சிவபக்தியோடுதானே இருக்கிறேன்… இருந்தும் ஈசன் உள்ளம் இளகவில்லையே! எனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்திருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இந்த மனச்சோர்வே என்னை மாளச் செய்துவிடும் போலிருக்கிறதே!’ என உளம் வெதும்பினார், வரகுணர்.

அன்றிரவு அவர் கனவில், சோம சுந்தரப் பெருமானைப் பூஜிக்கும் அர்ச்சகர் வடிவில் ஈசன் தோன்றி, ‘‘மன்னா, நீ திருவிடைமருதூர் செல்லப் போகிறாய். அங்கு உனைப் பீடித்த பிரம்மஹத்தி விலகும். உன் சிவபக்தியை உலகறியும். ஈசன் உனை அங்கேதான் ஆட்கொள்ளப் போகிறார்…’’ என்று உரைத்தார்.
வரகுண பாண்டியர் இதை எப்படி நம்புவது என்று புரியாமல், சந்தேகமும் குழப்பமும் அடைந்தார். காரணம், திருவிடைமருதூர் இருப்பது சோழ தேசத்தில். அங்கே இப்போது செல்ல வேண்டிய அவசியம் என்ன நேரப் போகிறது?

பல்லவ மன்னன் நிருபதுங்கனுக்குப் பின் காஞ்சியில் அரியணை ஏறிய அபராஜிதன், பாண்டியர் நட்பை மதிக்கவில்லை. எல்லைப் பிரச்னைகள் எழுந்தன. கங்க மன்னன் பிரதிவீபதியின் துணையுடன் படை திரட்டுகிறான். பாண்டியரை வெல்ல என்று செய்தி. விஜயாலய சோழன் புதல்வன் ஆதித்தனும் இதில் கூட்டு சேருகிறானாம். சோழர் எழுச்சியை ஆரம்பத்திலேயே ஒரு தட்டு தட்டி வைக்க வேண்டும் என்றனர் பாண்டிய நாட்டின் அரசியல் ஆலோசகர்கள்.
துவங்கியது போர். பாண்டிய சைன்யம் சூறாவளியெனத் தாக்கிற்று, சோழ பூமியை.  குடமூக்கை முட மூக்காக்கி, வடகரையின் இடவையில் மையம் கொண்டது போர்ப் புயல்.

வேம்பில் மதிள்களைத் தகர்த்து, வெற்றிப் பதாகையுடன் திருப்புறம்பியத்தில், கங்க மன்னனைக் களத்தில் வென்று, வீழ்த்தியும் ஆயிற்று. அப்போது பார்த்தா அப்படியொரு திருப்பம் நிகழ வேண்டும்? பாண்டியர் படை தங்கியிருந்த காவிரிக் கரையில் ஒரு சிவாலயம் தென்பட்டது. மன்னர் அந்த ஊர் பற்றியும் ஆலயம் பற்றியும் விசாரித்தார். அதுதான் திருவிடைமருதூர் என்றும் அங்கிருப்பது மத்தியார்ஜுனம் என்று புராணங்கள் போற்றும் மருதவாணர் ஆலயம் என்றும் கூறினர் மக்கள்.

அவ்வளவுதான்… ஈசனின் கனவுக் கட்டளை நினைவில் எழ, பாண்டிய மன்னர் மருத மாணிக்கம் எனப்படும் மகாலிங்கப் பெருமானைத் தரிசிக்க வந்து அந்த ஆலயத்தில் புகுந்தவர்தான். அதன் பிறகு அவரை அந்தத் திருவிடைமருதூரிலிருந்து வெளியேற்ற யாராலும் முடியவில்லை. பாண்டியர் படை மறுநாள் போரில் தோற்றன. திருப்புறம்பியத்திலிருந்து மதுரைக்கு விரட்டப்பட்டன. ஆனால், வரகுண பாண்டியனை என்ன செய்வதென்றுதான் ஆதித்த சோழனுக்குப் புரியவில்லை. அவன் ஒருநாள் பாண்டிய மன்னரை வந்து சந்தித்தான்.

‘‘என்னைச் சிறைப்படுத்த வந்திருக்கிறாயா?’’ என்றார் அவனிடம், வரகுண பாண்டியர்.

ஆதித்த சோழன் நன்றாகவே அறிவான், வரகுணரின் இளவல் பராந்தக பாண்டியன் எவ்வளவு பயங்கரமானவன், பலசாலி என்பதை. மதுரையின் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அண்ணன் இங்கு வந்திருக்கிறான். உள்நோக்கம்தான் புரியவில்லை. ‘நரி வலம் போனாலும் சரி, இடம் போனாலும் சரி, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி’ என்றெண்ணிக் கொண்டான்.

‘‘தங்களை நான் இப்போது போர்க்களத்திலா சந்திக்கிறேன், அரசியல் பேச? அப்படியும்கூட பாண்டிய மாமன்னரை சிறைப்படுத்துவதாக நான் பகற்கனவு கண்டதில்லை. பக்தியோடு மருதவாணர் ஆலயத்தில் தங்கியிருக்கும் தங்களுக்கு நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா எனக் கேட்கவே வந்தேன்…’’ என்றான்.
‘‘உதவி! நான் தங்க ஓரிடம் வேண்டும். மதுரையிலிருந்து என் துணைவி இங்கு வந்து தங்க ஒப்புதல் கொடு. மகாலிங்க ஈசனைத் தரிசித்தபடி இங்கேயே தங்கியிருக்க விரும்புகிறேன். நீ தஞ்சையில் கோட்டை கட்டு. உன் ஆட்சியைப் பலப்படுத்து. சோழ தேச அரசியலில் நான் தலையிட மாட்டேன்…’’
ஆதித்த சோழன், அரசியல் நாகரிகம் உணர்ந்தவன். பாண்டிய வேந்தனின் பக்தி உணர்வைப் புரிந்துகொண்டான். வரகுணர் தங்க மாபெரும் மாளிகை ஒன்றினை அளித்தான். பாண்டிமா தேவியாரையும் உரிய மரியாதைகளுடன் அழைத்துவரச் செய்தான்.

பராந்தக பாண்டியன், அண்ணனை மீண்டும் மதுரைக்கு வரவழைக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ‘‘தம்பி! இனி நீயே மதுரை மகுடம் சூடி ஆட்சி செய். நான் மருதவாணர் ஆலய சேவையிலேயே நிம்மதி காண்கிறேன்’’ என்று கூறிவிட்டார். ஈசன் திருக்கோயிலைப் புதுப்பித்து, பிரமாண்ட மதிற்சுவர் எழுப்பி, புதிய கோபுரமும் அமைத்தார். அது ‘வரகுணபாண்டியன் திருநிலை’ என்றே பெயர் பெற்று விட்டது.

பாண்டியன் தங்கியிருந்த மாளிகையில் புகுந்த திருடன் ஒருவன் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான். அவன் நெற்றியில் திருநீறு துலங்குவது கண்ட வரகுணர், தளை நீக்கி அவனை விடுவிக்க உத்தரவிட்டார், காவலர்களிடம் வேண்டிய பொருளும் நல்கினார். இரவில் கேட்ட நரிகளின் ஊளை, திருக்குளத்தில் கத்தும் தவளைகளின் ஒலி அனைத்தும் சிவநாம ஜபமாகவே அவருக்குத் தோன்றியதாம். வேப்பம்பழம் ஒவ்வொன்றும் சிவலிங்கம்போல் தோன்றியதால் அவை மண்ணில் விழா வண்ணம் பட்டு விதானம் அமைத்தார். தெருவில் திரியும் நாய்கள் நிழலில் படுக்கச்  சில மண்டபங்களை எழுப்பிய கருணாமூர்த்தி அவர்.

பாண்டிமாதேவியையே மருதவாணர் ஆலயப் பணிப்பெண்ணாக்கி, தனிச்சேரிப் பெண்டிருடன் தங்க அனுமதித்தது வரகுணரின் சிவபக்திக்கு உயரிய அத்தாட்சி.
(இம்மன்னன் கி.பி.862ல் அரியணை ஏறியவன், இரண்டாம் வரகுணம் என வரலாறு பேசும். மாணிக்கவாசகரின் சம காலத்தவன். அவர் தமது திருச்சிற்றம்பலக் கோவையாரில் இம்மன்னனைக் குறிப்பிட்டுள்ளார். பட்டினத்தார் தமது, ‘திருவிடை மருதூர் மும்மணிக்கோவை’யில் இவ்வாறு குறிப்பிடுகிறார்):

வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளனை கையிற் கட்டவிழ்ப் பித்தும்
ஓடும் பன்னரி யூளை கேட்டரனைப்
பாடினவென்று படாம் பல வளித்தும்
குவளைப் புனலிற் றவளை யரற்ற
ஈசன் றன்னை யேத்தின வென்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும்…
– என்னும் அப்பாடலின் இறுதி வரிகளில்
காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று
புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்…

-என இவ்வரலாற்றின் சாரம் அனைத்தையும் பதிவு செய்துள்ளார், பட்டினத்தடிகள். அப்பாண்டிமாதேவியின் சிலை இன்றளவும் திருவிடைமருதூர் மகாலிங்க ஈசன் ஆலயத்தில் உள்ளது.

ஆன்மீகக் கதைகள் – ஊழியம் பார்த்த ஊழி முதல்வன்

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன், சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். ‘‘தேவி, நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா; நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால், சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே…’’ என்று உறுதிபடக் கூறிவிட்டான். ‘‘அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்?’’ என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி.

ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு, ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான்.

வைகைக் கரைக்கு வந்து சேர்ந்தபோது, இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான், சோழன். அப்போது எங்கிருந்தோ திடீரென வந்து நின்ற ஓர் ஓடக்காரன், வைகையைக் கடக்க சோழனுக்கு உதவினான். அதுமட்டுமல்ல, ஆலயம் வரை வழிகாட்டியபடி வந்தான். ஆனால் ஆலயமோ அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. சிவநேசன் பரிதவிப்பதைக் கண்ட ஓடக்காரன் மனமிரங்கி, ‘‘கவலை வேண்டாம். ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கேசப் பெருமானைத் தரிசிக்காமல் ஊர்  திரும்ப நேராது’’ என்றான்.

அவ்வாறே திறவுகோலை வாங்கி வந்து, ஆலயக் கதவுகளைத்  திறந்து விட்டான். அர்த்தஜாம வழிபாடு முடிந்து, ஆலய நடை சார்த்தப்பட்டால், அதை இரவில் மீண்டும் திறக்கும் வழக்கமில்லை. அப்படி வழிபடுவதும் தவறு. எல்லாம் தெரிந்திருந்தும் சிவநேசச் சோழன் ஆர்வ மிகுதியால், சொக்கேசனை மகிழ்வுடன் வணங்கினான். ஆலயக் கதவை பழையபடி மூடிச் சாவியை ஒப்படைத்துவிட்டு வந்த ஓடக்காரன், சோழனை வைகையின் மறுகரையில் கொண்டு விட்டான். சோழன் கொடுத்த பொற்காசுகளையும் வாங்க மறுத்துவிட்டான், அந்த அதிசய ஓடக்காரன்.

மறுநாள் ஆலயத்தைத் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய இலச்சினையான மீன முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால், அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை! அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். ‘‘எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம்? இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும்’’ முழங்கி, படைதிரட்ட உத்தரவிட்டான்.

போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன், சோழநாட்டை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்… இரவு ஒரு கனவு. அதில் சோமசுந்தரப் பெருமான் தோன்றினார். ‘‘குலபூஷணா! சோழன் மீதுள்ள சினத்தை விடு, பகையை மற. அவனும் உன்போல் ஒரு சிவபக்தன். அவன் பக்தியை மெச்சி, நான்தான் ஓடக்காரனாகச் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி, முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து, சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி, முத்திரையிட்டபோது, நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா, நீ நினைப்பதுபோல் ‘நந்தி முத்திரை’ பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜதானியின் சிறப்பு அடையாளம்.

இதை ஒரு காரணமாக்கி, நீ சோழன் மீது போர்த்தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல; என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும்!’’ கனவில் வந்து சிவன் பேசப்பேச, மெய் சிலிர்த்து விதிர் விதிர்த்துப்போனார், பாண்டிய வேந்தர். பிறகு போராவது, பூசலாவது! சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி, நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன், பாண்டிய மன்னன் ஆனான். ஆனால், ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை.

இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான். சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன், ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து, ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி, ‘‘பிரபு! பழசையெல்லாம் மறந்துவிடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதால், உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி, உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க்கிடக்கிறாரே; பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள்’’ என்றாள்.

‘‘இல்லை தேவி! தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக்கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்துவிட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். என் தந்தையின் கனவில் தோன்றினார் – அதுவும் சோழனுக்காக வாதிட. எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து, மரணத்தில் தள்ளியது. இவ்வளவு  வருந்துகிறேனே, என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன்.’’
இந்த முறையீடு மதுரைச் சொக்கநாதப் பெருமானின் செவிகளில் விழாமலா இருக்கும்?

சோழன் மகளை மணந்து, உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன், மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால், மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம்.
முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசைமொழிகளை அர்ச்சித்துவிட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். ‘‘குலபூஷண பாண்டியனின் புதல்வனே! என் மீது சினம் கொண்டு, பிணங்கிக் கிடக்கும் பிள்ளையே! எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல.

அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து, அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக்கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர்தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி, உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு, விழி, போராடு. என் எதிரியை வெற்றிக் கொள்…’’ சிவபிரான் பேசக்கேட்டு, சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும்வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப்படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டான். சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம்.

வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும், தீப்பந்தங்களும் ஏந்தி நின்று, காத்திருந்து, மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்! மதுரைப்படை ஒரு போர்ப்பயணம் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன். எங்கும், எல்லோரும் கூறியது ஒரே தகவல்: ‘‘ஆஜானுபாகுவான ஒரு மனிதர் பாயும் புரவிமீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி, சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து, ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார்.

அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம்…’’ யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழவேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். ‘யார் அந்த மாய மனிதன்?’ என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம்! ‘‘பிரபோ! தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான்’’ என்றான்.

‘‘யார் நீ? என் ஊழியரில் எவரும் உன்போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்…?’’
‘‘இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும்…’’

புரவி நந்தியாக மாற, பாண்டிய வீரன் சிவனாகிறார்! ‘‘ஆ! ஐயனே! தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்?’’

‘‘பதற்றம் வேண்டாம், பாண்டிய மன்னா! ‘பரிகாரம்’ என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று, பக்தனுக்காக இறைவனும் செய்யலாம்! நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன்; உன் ராஜ இலச்சினைகளை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா, இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா?’’

‘‘சிவ சிவா! என்ன பேச்சு சுவாமி இது… தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள்…’’

‘‘நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து, மன்னித்து ஏற்றுக்கொள்.’’

‘‘அப்படியே ஆகட்டும் ஐயனே! இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா?’’

விண்ணும் மண்ணும் அதிர வாய்விட்டு நகைத்தார் அரன். பிறகு, ‘‘ராஜசேகரா! என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? ‘சிவன் என் கனவில் வரவேண்டும்’ என்றுதானே? வந்து விட்டேன்! சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான்; கனவு ஒரு வாழ்வுதான். கவலையைவிடு கடமையைச் செய்…’’

சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து, பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று, சொக்கேசப்பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவு விருத்தாந்தங்கள், வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.

ஆன்மிகக் கதைகள் – இறுதி மூச்சு வரை உன் பணியே!

ராம லக்ஷ்மணர்கள் சுக்ரீவன் உள்ளிட்ட வானரசேனை, அத்துடன் பராக்கிரம அனுமன் இத்தனை பேரும் ஒன்று கூடி ராவணேஸ்வரன் பிடியிலுள்ள சீதையை எவ்வாறு மீட்பது என்று ஆலோசித்தனர். சுக்ரீவன் வானரங்களை திசைக்கொருவராய்ச் செல்ல உத்தரவிட்டான் பின் அனுமனைப் பார்த்து. பலம், புத்தி நன்னெறி, இடத்திற்கும் காலத்திற்கும் உகந்த வண்ணம் நடத்தல் ஆகிய எல்லா குணங்களும் கொண்டவரே சீதையை மீட்கும் வழியைச் சொல்லுங்கள் என்றான். சுக்ரீவனின் வார்த்தைகளும் அனுமனின் தோற்றமும் ஸ்ரீராமபிரானுக்கு , இவரே தம் காரியத்தை முடிக்க வல்லவர் என்ற எண்ணத்தைத் தந்தது. உடனே தனது மோதிரத்தை ஓர் அடையாளமாக ராமன் அனுமனிடம் அளித்தார். தன் பிரபுவின் எண்ணப்படியே சீதையைக் கண்டு. நல்ல சேதியுடன் ராமனிடம் வந்து அவரது விஸ்வாசமான வேலைக்காரனாக அனுமன் ஆனான்.

எஜமானன் அளிக்கும் வேலையை ஒருவன் சிரத்தையாகச் செய்யும் அளவிற்கு உண்மையான வேலைக்காரனாக ஆகலாம் இறைவனுடைய பணிகளில் நம்மை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு அதற்கென்றே நாம் உழைக்க வேண்டும். இவ்வாறு செய்யச் செய்ய, நமது மூச்சும் பேச்சும் அவனது வேலைகளைப் பற்றியதாகவே இருக்கும் இதன் பலன் என்ன தெரியுமா? நாம் அவனது வேலைக்காரனாகி விடும்போது. அவனை வேலை வாங்கவே மாட்டோம். இறைவன் வருவதும் தெரியாது நமக்காக வேலை பார்ப்பதும் தெரியாது. அப்படி ஒரு நிலை இது. இரு எடுத்துக்காட்டுகளைக் காணலாம். சிறந்த பக்தர். தனது கிழிந்த துணியைத் தைக்கிறார் அவரது குணத்தில் மகிழ்ந்து சிவனும், பார்வதியும் பக்தருக்கு தரிசனம் தந்து ஏதாவது வரம் கேட்கும்படி அவரிடம் கூறுகின்றனர்.

அவர் எனக்கு எதுவுமே வேண்டாம் என்றாலும் இறைவனும் இறைவியும் திரும்பத் திரும்ப வற்புறுத்துகின்றனர் வரம் கேட்குமாறு. நான் தைக்கும் போது ஊசியின் பின்னாலே நூலும் வரவேண்டும் – இது பக்தர் கேட்ட வரம். இறைவன் சிரித்தவாறே, ஊசியின் பின்னால் நூல் வரத்தானே செய்யும்! இதற்கு எதற்கு வரம் ? என்று கேட்டார். பக்தர் கூறினார் : இந்த உலகில் எல்லாச் செயல்களும் உங்கள் இச்சைப்படியே நடக்கும் பொழுது எனக்கு எதற்கு வரம்? பின் சிவ பார்வதி தம்பதியினர் புன்னகைத்தவாறே மறைந்தனர். இன்ப துன்பங்களைக் கடந்த நிலை இது . மற்றொரு கதை அம்பிகை தனது பக்தன் ஒருவனுக்கு காட்சிகொடுத்து வரம்கேட்குமாறு கூறினாள். என் வலது காலில் உள்ள வீக்கத்தை இடது காலுக்கு மாற்று என்றான் பக்தன் இதெல்லாம் என்னால் முடியாது. வேறு வரம் கேள் என்று கூறினாள் அன்னை. பக்தன் சிரித்தவாறே, வேறு வரம் எனக்கெதற்கு எனக்கென்று உள்ளதை நான் அனுபவித்துத்தானே தீர வேண்டும் என்றதும் தனக்கு இனி வேலையில்லை என்றெண்ணிவாறே அங்கிருந்து அம்பிகை அகன்றாள்.