Category: அப்பாஜி கதைகள்

அப்பாஜி கதைகள் – திலகாஷ்ட மகிஷ பந்தனம்

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவ ராயருக்கு ஒரு சந்தேகம் வந்தது. நமது மந்திரிகள் மிகுந்த சாமர்த்திய சாலியாக உள்ளனரா என்று சோதித்து அறிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார்.அதனால் அன்று சபை கூடியதும் ஒரு வினா எழுப்பினார்.

“சபையோரே, நேற்று இரவு என் அறைக்குள் ஒரு திருடன் நுழைந்தான். அவன் என் மார்பின்மீது எட்டி உதைத்தான்.அத்துடன் அவனது இரண்டு கைகளாலும் என்னைக் கன்னத்தில் அடித்தான். அவனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று நீங்களே கூறுங்கள்.”

“அவன் எங்கே இருக்கிறான் பிரபு?”
“அவனைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன்.”
“அவனைக் கை கால்களை வெட்டி வீசவேண்டும்.  இல்லையில்லை.அவனுக்கு  மரண தண்டனைதான் தரவேண்டும்.அவனை நகரத்து வீதியில் நிற்கவைத்து கசையால் அடிக்கவேண்டும்.”
ஒவ்வொருவரும் ஆத்திரத்துடன் பேச மன்னர் புன்னகை புரிந்தார்.
அமைதியாக இருந்த அப்பாஜியைப் பார்த்து “அப்பாஜி உங்களுக்கு ஒன்றும் தோன்ற வில்லையா?”என்று கேட்டார் மன்னர்.
புன்னகையுடன் எழுந்த அப்பாஜி”மன்னா,உங்களை உதைத்த கால்களுக்கு மாணிக்கப் பரல் வைத்த தங்கக் காப்புப் போடவேண்டும்.தங்களை அடித்த கைகளுக்கு வைர வளையல் செய்து போடவேண்டும்.தங்களின் அன்புப் பிடிக்குள் நீங்கள் கட்டி வைத்திருக்கும் இளவரசன் அல்லாது இந்தக் காரியத்தைச் செய்ய வல்லவர்கள் யார் பிரபு?” என்று கூறியபோது மன்னர் ” பலே அப்பாஜி பலே!”,என்று மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
“நேற்றிரவு என் மகன்தான் என்னைக் காலால் உதைத்துத் தன் பிஞ்சுக் கரங்களால் என் கன்னத்தில் அடித்து விளையாடினான்.அவனைத்தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன்.அப்பாஜி சரியான பதில் அளித்துவிட்டார்.”
இந்த சொல்லைக் கேட்ட சபையோர் பலத்த ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
அப்போது மன்னரின் சபைக்கு ஒரு புலவர் வந்திருப்பதாகக் காவல்காரன் வந்து அறிவிக்கவே,அவரை வரவேற்குமாறு அப்பாஜி கூறினார்.மிகுந்த ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்த அந்த புலவர்  தன்னை மிகவும் கற்றவர் எனவும் தன்னை வெல்ல யாராலும் முடியாது எனவும் அப்படி யாரேனும் தன்னை வென்று விட்டால் தான் பெற்ற பட்டங்களையும் தன் பரிசுப் பொருள்களையும் கொடுப்பதாகவும்  கூறினார்.
அவரது ஆரவாரத்தைப் பார்த்த அங்கிருந்த புலவர்கள் சற்றுப் பயந்தனர்.தாங்கள் தோற்று விட்டால் தங்களால் விஜயநகர அரசுக்குக் கெட்டபெயர் வந்து விடுமே எனத் தயங்கினர்.ராயரோ அவையில் உள்ள புலவர்களை நோக்கி
” நம் நாட்டில் இந்தப் புலவரை வெல்ல யாரும் இல்லையா?” எனக் கேட்டார்.
அப்போது தெனாலிராமன் எழுந்து நின்றான்.”அரசே, தாங்கள் அனுமதித்தால் நான் இந்தப் புலவருடன் வாதிடுகிறேன்.”
“செய் ராமகிருஷ்ணா, நம் நாட்டில் தோல்வியென்பதே வரக்கூடாது.”
ராமன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.”ஐயா புலவரே. இப்படி வாரும்.என்னிடம் இருக்கும் இந்த நூலில் இருந்துதான் தங்களிடம் வினாக்கள் கேட்கப் போகிறேன்.எல்லா வினாக்களுக்கும் தவறாமல் தாங்கள் பதில் கூறவேண்டும் அப்படிக்கூறிவிட்டால் நீர் வென்றவர் ஆவீர்”.
வந்த புலவர் “அது என்ன நூல் எனத் தெரிந்தால்தானே நான் பதில் கூறமுடியும்?”என்றார் தயங்கியபடியே.
ராமன் அலட்சியமாக”திலகாஷ்ட மகிஷ பந்தனம்தானய்யா”என்று கூறியதும் அந்தப் புலவர் திகைத்தார்.
“என்னது? திலகாஷ்ட மகிஷ பந்தனமா? அப்படி ஒரு நூலை நான் படித்ததே இல்லையே.”
“என்ன, இந்த நூலை நீர் படிக்கவில்லையா?என்ன புலவரைய்யா நீர்? இந்த நூலைப் படிக்காமல் உம்மை நீர் புலவர் என்று வேறு கூறிக் கொள்கிறீர்! தெரியவில்லைஎன்றால் தோல்வியை ஒப்புக் கொண்டு ஊர் போய்ச் சேரும் முதலில் இந்த நூலைத் தேடிப் படியுங்கள்.”
“பிரபு, நான் இந்த நூலைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் இன்றுடன் என் பட்டங்கள் அனைத்தையும் துறந்தேன் என் பரிசுப் பொருளை இந்தத் தெனாலி ராமனுக்கே கொடுத்துவிடுகிறேன்.”
என்றார் தலை குனிந்தபடியே.
“உமது பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம் அதை நீரே எடுத்துக் கொண்டு போய்ச் சேரும்” என்று அவரைப் போக விட்டான் தெனாலி ராமன்.
அவர் செல்வதைப்  புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமனிடம் ராயர் மதுவாகக் கேட்டார்.”ராமகிருஷ்ணா, அது என்ன நூல்? நான் கூட கேள்விப்படாததாக உள்ளதே?”
ராமன் புன்னகையுடன் “இதுதான் அரசே,”என்றபடி தன்னிடம் இருந்த ஒரு மூட்டையை அவிழ்த்துக் காட்டினான்.அதில் ஒரு எள்ளுச் செடியும் அதைக் கட்டிய கயிறும் இருந்தது.மன்னர் ஒன்றும் புரியாமல் என்ன இது? என்றபோது ராமன் விளக்கினான்.
“அரசே, திலம் என்றால் எள். காஷ்டம் என்றால் காய்ந்த செடி.திலகாஷ்டம் என்றால் காய்ந்த எள்ளுச் செடி.மகிஷ பந்தனம் என்றால் எருமையைக் கட்டும் கயிறு. இதோ இந்த எள்ளுச் செடிகளை கயிற்றால் கட்டியிருக்கிறேன்.
இதைச் சேர்த்துச் சொன்னால் திலகாஷ்ட மகிஷ பந்தனம்.இதைத்தான் கூறினேன். அவர் இது ஏதோ புதிய நூல் என்று பயந்து ஓடிவிட்டார்.”
“கர்வத்தோடு வந்தவரை அவரது கர்வம் அடங்கும்படி செய்து விட்டாய் பலே, ராமகிருஷ்ணா,உன் சமயோசித புத்தியால் நம் சாம்ராஜ்யத்தின் பெருமையைக் காப்பாற்றினாய்.அது சரி அவர் இந்தநூலைக் காட்டும்படி கூறியிருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்றுகேட்டபோது ராமன் சிரித்தான்.
“அவ்வப்போது தோன்றும் யோசனைகளுக்கேற்றபடி அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி சமாளிப்பேன் மகாராஜா.முதலில் அருகே வரும் பிரச்னையை சமாளிக்க வேண்டும்.அதுதான் என் குறிக்கோள்.”
“பலே ராமகிருஷ்ணா, உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.”என்று கூறிய மன்னர் ராமனுக்குப் பரிசளித்து மகிழ்ந்தார்.
ராமன் சமயோசிதம் நிறைந்தவன் என்றுமட்டுமே  நினைத்துக் கொண்டிருந்தனர்.இந்த செய்கையால் அவன் துணிச்சல் மிகுந்தவன் என்பதையும் அனைவரும்  புரிந்துகொண்டு அவனைப் பாராட்டினர்.

அப்பாஜி கதைகள் – தன்​னைப் ​போல்தான் வாழ்வார் உலகிலுள்​ளோர்களும்

தினசரி அதிகா​லையில் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் ​தொழிலாளி ஒருவன் அரண்ம​ணைக்கு வருவது வழக்கம்.  தினசரி கா​லையில் முகத்​தை மழித்து முடி​யைத் திருத்துபவராதலால் அந்தத் ​தொழிலாளியிடம் ​வேடிக்​கையாக எ​தையாவது​ பேசுவது கிருஷ்ண​தேவராயரின் வழக்கம்.  அவனும் மன்னர் ​கேட்கும் ​கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலு​ரைப்பான்.

ஒருநாள் அவன் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருக்கும் ​போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்​றே.  நமது நாட்டு மக்களின் வாழ்க்​கைத் தரம் எந்த நி​லையில் இருக்கிறது என்று உனக்குத்​ தெரிந்திருக்கு​மே என்றார்.  ”​

மேன்​மை தாங்கிய மகாராஜா அவர்க​ளே!  தங்களு​டைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர்.  மக்களின் ஒவ்​வொருவர் இல்லத்தில் கு​றைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது.  அதனால் எவரும் கவ​லையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்​தொழிலாளி.  சவரத்​ தொழிலாளி ​சென்ற பின்னர் எப்​போதும் ​போன்று மன்ன​ரைக் காண அப்பாஜி வந்தார்

அப்பாஜியிடம் சவரத் ​தொழிலாளி கூறிய​தை மன்னர் கூறினார்.  ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்?  இவன் ​சொன்னது ​போன்று எப்படி ​எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் ​பொன் இருக்கும்?  எலுமிச்சம்பழ அளவு ​பொன் என்பது சாதாரண மக்கள்​ வைத்திருக்க முடியாது!  ​பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும்.  ஆ​கையினால் இதுபற்றித் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும்!” என்று வினவினார்.

”இதற்கு வி​ரைவில் வி​டை​யைக் கூறுகி​றேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார்.  மறுநாள் வழக்கம்​போல் சவரத் ​தொழிலாளி அரண்ம​னைக்கு வந்து கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருந்தான்.

அச்சமயம் அப்பாஜி, காவலர்க​ளை அ​ழைத்து ”சவரத் ​தொழிலாளியின் இல்லத்​தை ​சோத​னை ​செய்துவிட்டு வி​ரைவில் வாருங்கள்” என்று கட்ட​ளையிட்டார்.

காவலர்கள் சவரத் ​தொழிலாளியின் இல்லத்திற்குச் ​சென்று ​சோத​னை ​செய்த​போது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு ​பொன் இருப்ப​தைக் கண்டு வந்து கூறினர். அத ​னை மன்னரிடம் ​கொடுத்துவிட்டு, மன்னர் ​பெருமா​னே! அடுத்த நாள் சவரத் ​தொழிலாளி வந்ததும், முதலில் ​கேட்டது ​போன்று ​கேளுங்கள். அவனிடமிருந்து ​வேறு விதமான பதில் கி​டைக்கும்” என்றார் அப்பாஜி.

வழக்கம் ​போல் கா​லை கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிக்க சவரத் ​தொழிலாளி வந்தமர்ந்தான்.  வரும்​போ​தே அவனது முகம் வாடியிருந்தது.  அவன் தனது ​வே​லை​யை ஆரம்பிக்கும் சமயம்,

”இப்​​பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?  ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?”  என்று வினவினார் மன்னர்.

”​பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்க​ளே! அ​தை ஏன் ​கேட்கின்றீர்கள்?  எல்​லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். ​ கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்​தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத்​ தொழிலாளி கண்களில் நீர் மல்க ​தொண்​டை அ​டைக்கக் ​கூறினான்.

அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் ​பெருமா​னே!  இப்​போது வி​டை ​தெரிந்து விட்டதா?  உலகத்திலுள்ள ஒவ்​வொருவரும் தன்னு​டைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நி​லை​யை நிர்ணயிக்கின்றனர்.  தன்​னைப் ​போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நி​னைக்கின்றனர்.

தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநி​லையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி.  உட​னே காவல​னை அ​ழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு ​பொன்​னைக் ​கொண்டு வந்து சவரத் ​தொழிலாளியிடம் ​கொடுங்கள்” என்று ஆ​ணையிட்டார் மன்னர். ​

கொண்டு ​கொடுத்த ​பொன்னுடன் சிறிது ​பொன்னும் பரிசாகச் சவரத் ​தொழிலாளிக்குக் ​கொடுத்தார்.  அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் ​வாங்கிச் ​சென்றான்.  மனித இயல்​பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திற​மை​யைப் பாராட்டினார் கிருஷ்ண​தேவராயர்.

அப்பாஜி கதைகள் – கவலையும் பலமும்

கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.
“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.
இளைஞனின் அம்மாவிடம் “அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவனாகிவிடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.
சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது.
“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்ற கவலையால் இளைஞன் பலமிழந்தான். கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.

அப்பாஜி கதைகள் – கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை

விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார்.

அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் “ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார்.

சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் “நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ “மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்” என்றார்.

அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான்.

அப்பாஜி கதைகள் – ஆறாவது முட்டாள்

அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர் ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், “”அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள் நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப் பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு வாருங்கள்,” என்று ஆணையிட்டார்.

“”முட்டாள்களின் முகவரி எதற்கு?” என்று பணிவுடன் கேட்டார் அப்பாஜி.

“”வீணாக விளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச் செய்யும்!” என்று அரசர் கண்டிப்பாகக் கூறினார்.

அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்க வேண்டுமே! எங்கே போவது? எப்படி முட்டாள்களைச் சந்திப்பது?

அப்பாஜி இரண்டு மணி நேரம் மாறு வேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையை ஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார்.

அப்போது ஒருவன் கழுதை மீது ஏறி வந்தான். அவன் தலை மீது ஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான்.

“”ஐயா, கழுதை மீது இருக்கும் நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார் அப்பாஜி.

“”உமக்கு அறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமே சுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும் சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்,” என்றான்.

அப்பாஜிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்த முட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார்.

சிறிது துõரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு மரத்தின் நுனி கிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி,

“”ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டு வெட்டினால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள்.
அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க,” என்றார்.

“”ஏன்யா… நான் என்ன மடயன்னு நெனச்சியா… நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தை வெட்டினா இந்த மரக்கிளை கீழே விழும். நீ உடனே துõக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்,” என்றான்.

“”சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்… உங்க வீட்டு முகவரியை கொடுங்க…” என்று வாங்கிக் கொண்டார். அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பை பற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார்.

“”பாட்டி என்ன பிரச்னை? என்றார் அப்பாஜி, “”அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகு தான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும் ஒரே மாதிரி தானே இருக்கு அதனால இந்த விறகுகள்ல நல்லா தண்ணிய ஊத்தி எரிய வைக்க முயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது,” என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும் குறித்துக் கொண்டார் அப்பாஜி.

அடுத்த முட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாக வேண்டும்! ஒரு மணி நேரமே உள்ளது.

அலுத்துப் போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்து முடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம்,

“”தாங்கள் எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?” என்று விசாரித்தார்.

அவன், “”ஐயா, நான் என் உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்,” என்று கவலையுடன் கூறினான்.

“”ஏதாவது அடையாளம் வைத்து இருந்தாயா?”

“”ஆமாம், அடையாளத்தையும் காணோம்.”

“”என்ன அடையாளம்?”

“”வானத்தில் வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டு அதன் அடியில் அவற்றை வைத்தேன்.”

அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன் பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார்.

மாலை ஆறு மணி அப்பாஜி அரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும் கொடுத்தார்.

கிருஷ்ணதேவராயர் அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்த அரசன், “”அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின் விலாசம் எங்கே?” என்று கேட்டார்.

அப்பாஜி, “”அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத் தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாக எழுதிக் கொள்ளுங்கள்,” என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார்.

பிறகு, “”அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம் எங்கே?” என்று அரசர் ஆர்வத்துடன் கேட்டார்.

“”அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத் தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால் பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!” என்று உருக்கமாகக் கூறினார்.

அரசனுக்குத் தான் செய்த தவறு புரிந்து விட்டது. தன் கையிலிருந்து நான்கு முட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார்.