அக்பர் பீர்பால் கதைகள் – விலைமதிப்புள்ள பொருள்

4.4/5 - (11 votes)

சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும்.

தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல சமயங்களில் அவரைக் கிண்டல் செய்வதுண்டு. சிலசமயம் அவளுடைய கேலிப் பேச்சினால் கோபமடைந்தாலும், சக்கரவர்த்தி உடனே அவளிடம் சாந்தமாகி விடுவார் என்ற அனுபவம்தான் காரணம்!

ஒருநாள் மாலை நேரம், அக்பரும் பேகமும் அந்தப்புரத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். சாளரத்தின் வழியே வீசிய தென்றல் காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தது. அதை அக்பர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கிண்டல் செய்ய வேண்டுமென்று பேகத்திற்குத் தோன்றியது. “ஏது! மல்லிகை மணம் உங்களை மயக்குகிறதோ? என்னிடம் இல்லாதது மல்லிகையில் அப்படி என்ன இருக்கிறது?” என்று வாயைக் கிண்டினாள்.

“ஆம்! மல்லிகை மணம் என்னை மயக்குகிறது. அதிலுள்ள மயக்கம் உன்னிடம் இல்லை!” என்றார் திடீரென எரிச்சலுற்ற அக்பர். “என்னைத்தான் நேசிக்கிறீர்கள் என்று நினைத்தேன். என்னைவிட மல்லிகை மீதுதான் மோகமா?” என்று பேகம் மீண்டும் வம்புக்கிழுத்தாள்.

“ஆமாம்! உன் மீது மோகம் இருக்கவேண்டுமென்று என்ன அவசியம்?” என்றார் மேலும் கோபமுற்ற அக்பர்.

“மனைவி என்ற முறையில் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு!” என்று பதிலளித்தார் பேகம்.

“அந்த உரிமை யாருக்கும் கிடையாது. நான் மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனில்லை. ஏனெனில் நான் சக்கரவர்த்தி!” என்று உரக்க முழங்கினார் அக்பர்.

“என்ன? எனக்குக்கூட கிடையாதா? நான் என்ன சாதாரணப் பெண்ணா?” என்றார் பேகம். அக்பர் தான் கேலியாகக் கேட்டதில் கோபமடைந்து விட்டார் என்று உணர்ந்த அவளுடைய கண்கள் பனித்தன.

“அந்த ஸ்தானத்தை நீ இழக்கும் வேளை நெருங்கிவிட்டது!” என்று அக்பர் ஒரு குண்டைத் தூக்கிப் போட, அதை சற்றும் எதிர்பாராத பேகம் அழுதே விட்டாள். ஆனால், அவள் கண்ணிரைப் பொருட்படுத்தாத அக்பர், “என்னுடன் உனக்கான உறவு இன்றுடன் முடிந்தது. நீ உன் பிறந்தவீட்டுக்கு நாளைக்கே போய்விடு! உனக்குப் பிடித்த பொருள்களை நீ எடுத்துச் செல்லலாம்” என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டார்.

தன்னுடைய விளையாட்டு இப்படி வினையாகும் என்று சற்றும் எதிர்பாராத பேகம் துடிதுடித்துப் போனாள். ஏதோ கோபத்தில் கூறிவிட்டாரென்றும், விரைவில் அவர் கோபம் தணிந்து விடுமென்றும் தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால், அன்றிரவு அக்பர் அவளைத்தேடி அந்தப்புரத்திற்கு வரவேயில்லை. ‘ஐயோ, விஷயம் விபரீதமாகி விட்டதே!’ என்று பதைபதைத்துப் போன பேகம், மறுநாள் தன் தாதி மூலம் “நான் உங்களுடைய மனத்தை என் கேலிப்பேச்சினால் புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று கடிதம் எழுதிஅனுப்பினாள்.

ஆனால், அக்பர் “உங்கள் பேகத்தைப் பெட்டி, படுக்கைகளுடன் நாளையே கிளம்பச் சொல்!” என்று இரக்கமின்றி பதில் சொல்லி அனுப்பினார். அதைக்கேட்டு இடி விழுந்தது போலான பேகம், அளவற்ற கோபமடைந்தத் தன் கணவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று வழிதெரியாமல் தவித்தாள். கடைசியில் அவளுக்கு பீர்பால் ஞாபகம்வர, அவரை உடனே வரவழைத்தாள்.

உடனே பேகத்தைத் தேடிவந்த பீர்பால் அவள் முன்னிலையில் வணக்கம் தெரிவித்தபின் தன்னை அழைத்தக் காரணம் கேட்க, பேகம் கண்களில் நீர் தளும்ப நடந்த விஷயத்தைக் கூறியவுடன் “நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள்! உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்!” என்று பீர்பால் பேகத்திற்கு தைரியம் கூறிவிட்டு வீடு திரும்பினார்.

 

உடனே பீர்பாலின் யோசனைப்படி, தன் பொருள்களை எடுத்துப் பெட்டியில்வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். தன்னுடையது மட்டுமின்றி, அக்பரின்பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிறகு தன் தாதி மூலம்அக்பருக்கு, “பிரபு! நான் பிறந்த வீடு செல்லத் தயாராகி விட்டேன். ஆனால்,போவதற்கு முன் உங்களை ஒரேயோரு முறை சந்தித்து மன்னிப்புக் கோரவிரும்புகிறேன்” என்று செய்தி அனுப்பினாள்.

 

அதற்கு சம்மதித்த அக்பர், ஒரு மணி நேரம் சென்றபின் அந்தப்புரத்தை அடைந்தார். அவரை வாயிலில் நின்று புன்னகையுடன் வரவேற்ற பேகம் அவருக்கு இருக்கையளித்து உபசரித்தாள். ஆனால், அவளுடைய உபசரிப்பை அலட்சியம் செய்த அக்பர், கடுமையான குரலில் “நீ எப்போது போகப் போகிறாய் என்று மட்டும் சொல்!” என்றார். “இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், போவதற்கு முன், நான் இதுவரை உங்கள் மனத்தைப் புண்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்தேன் என்று உங்கள் வாயினால் கேட்ட பின்னரே, என்னால் நிம்மதியாகப் பிறந்த வீடு செல்ல முடியும்” என்று பேகம் உருகினாள்.

“சரி, மன்னித்து விட்டேன்! இப்போது புறப்படுகிறாயா?” என்று வேண்டா வெறுப்புடன் கூறிய அக்பர் எழுந்து செல்லத் தயாரானார். உடனே அவரை அமரச் சொன்ன பேகம், “தயவு செய்து நான் அன்புடன் அளிக்கும் இந்தப் பழச்சாறை அருந்துங்கள்” என்று ஒரு கோப்பையை நீட்டிய பின், “இதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் கடைசி பானம்!” என்று விம்மியழ, அக்பரும் சற்றே மனமிளகி, அந்தப் பழச்சாறைக் குடித்தார்.

 

குடித்த பிறகு பேகத்தை நோக்கி, “உனக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் எதுவானாலும் நீ இங்கிருந்து எடுத்துச் செல்ல உனக்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டேன். நான் வருகிறேன்” என்று விறைப்புடன் அக்பர் கூற, பேகத்தின் இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை அரும்பியது. பிறகு, எழுந்து இருந்து செல்ல முற்பட்ட அக்பருக்கு திடீரென உடலை என்னவோ செய்ய, “எனக்கு ஒரே தூக்கமாக வருகிறது” என்று தள்ளாடினார்.

உடனே விரைந்து சென்று அவரைத் தாங்கிப் பிடித்த பேகம், “ஐயோ! ஏன் இப்படித் தடுமாறுகிறீர்கள்? சற்று நேரம் உட்கார்ந்து விட்டுச் செல்லுங்கள்” என்று அவரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் உட்காரச் செய்தாள். அடுத்தகணம் தன்னை அறியாமல் படுக்கையில் சாய்ந்த அக்பர், அப்படியே தூங்கி விட்டார்.

 

தான் பழச்சாறில் கலந்த மருந்து வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்த பேகம், உடனே தன் கைகளைத் தட்டி சில காவலர்களை அழைத்து, அக்பரை படுக்கையோடு சேர்த்து எடுத்துச் சென்று பல்லக்கில் வைக்கும்படி உத்தரவிட்டாள். அப்படியே அவர்கள் செய்ய, உடனே பேகம் தங்கள் இருவரது உடைமைகளையும் மற்றொரு பல்லக்கில் ஏற்றித் தானும் ஏறிக்கொள்ள, உடனே இரண்டு பல்லக்குகளும் ஆள்களால் சுமக்கப்பட்டு, பேகத்தின் பிறந்த வீட்டை அடைந்தன.

தன் வீட்டையடைந்ததும், பேகம் அங்கிருந்த பணியாட்களுக்கு இட்டக் கட்டளையின்படி, அவர்கள்  அக்பரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு வந்து படுக்கையறையில் கிடத்தினார்கள்.

“ஐயோ! ஏன் இப்படி சக்கரவர்த்தியை தூக்கி வருகின்றனர்? அவருக்கு உடல் சரியில்லையா?” என்று பேகத்தின் பெற்றோர் பதறிப்போக, “ஒன்றுமில்லை. கடந்த சிலநாள்களாக இருந்த மிக அதிகமான வேலையினால், பல்லக்கில் வரும்போது தூங்கிக் கொண்டே வந்தார். உண்மையில் ஒரு நாள் ஒய்வு எடுக்கவே அவர் இங்கு வந்துள்ளார்” என்று பேகம் பதிலளித்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து கண்களைத் திறந்த அக்பர், பேகத்தை நோக்கி, “நான் எங்கிருக்கிறேன்?” என்று கேட்டார். “நீங்கள் என் பிறந்த வீட்டில்தான் இருக்கிறீர்கள்” என்று பேகம் புன்னகையுடன் கூற, அக்பருக்கு சுரீர் என்று கோபம் தலைக்கேறியது.

“நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை இங்கு தூக்கி வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று அவர் சீறினார்.

“நீங்கள் தான் பிரபு!” என்று அவர் சீறினார்.

“என்ன உளறுகிறாய்? நான் எப்போது அனுமதி தந்தேன்?” என்று அக்பர் கேட்க, அதற்கு பேகம், “உனக்குப் பிடித்த பொருள் எதுவானாலும் நீ இங்கிருந்து அதை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்ததே நீங்கள்தான்! எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த பொருள் நீங்கள்தான்! அதனால் உங்களை என்னுடன் எடுத்து வந்ததில் என்ன தவறு?” என்று சாமர்த்தியமாக மடக்கினாள்.

“ஓ!” என்ற அக்பர் திடீரென வாய்விட்டு சிரித்தார். “நீ மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு இருக்கிறாய். சரி வா! நாம் நம் அரண்மனைக்குப் போவோம்!” என்ற அக்பர், தொடர்ந்து, “அதிருக்கட்டும்! உனக்கு இந்த அபாரமான யோசனையை சொல்லிக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்.

அதற்கு பேகம் “நீங்கள்தான் மிகவும் புத்திசாலியாயிற்றே! கண்டுபிடியுங்களேன்!” என்றாள் .

“அது நிச்சயம் பீர்பாலாகத் தானிருக்கும்” என்றார் அக்பர்.

Leave a comment