அக்பர் பீர்பால் கதைகள் – அறிவுப் பானை

4/5 - (17 votes)

வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

 

சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின் அடிமைகளாகத் திகழ்வது அவமானம் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அதற்கு வீரசிம்மன், “நானும் சுதந்திரத்தை விரும்புகிறேன். ஆனால் அதைப் பெறுவதற்காக, இரத்த ஆறு ஓடுவதை நான் விரும்பவில்லை, முகலாயர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள். அவர்களுடைய படைப்பலத்திற்கு முன் குறுநல மன்னனாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.

 

அதற்கு அவர்கள் “படைப்பலத்தை மட்டும் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? நம்முடைய அறிவினால் முகலாயர்களை வெற்றி கொள்ள முடியாதா?” என்றனர். “நம்மிடம் அத்தகைய அறிஞர்கள் இருக்கிறார்களா?” என்றார் வீரசிம்மன்.
“ஏன் இல்லாமல்?” என்றனர் இளைஞர்கள்.

 

“ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! அக்பரின் சபையில் உள்ள அறிஞர்களைப் போல் வேறு எங்குமே காண முடியாது” என்றார். “அவர்களுடைய அறிவுத்திறமையை சோதித்துப் பார்த்து விடலாமே!” என்று சவால் விட்ட ஓர் இளைஞன் “நான் ஒரு சோதனை சொல்கிறேன். நீங்கள் அக்பரிடம் அவருடைய தர்பாரிலிருந்து அறிவு நிரம்பிய ஒரு பானையை அனுப்பச் சொல்லி வேண்டுங்கள்” என்றான். “அறிவு நிரம்பிய பானையா? அது ஏன்? தண்ணீரைப் பிடிப்பதுபோல் பானையில் அறிவை நிரப்ப முடியுமா?” என்று கேட்டார் மன்னர்.

“அது இயலாது என்று நினைக்கிறீர்களா?” என்றான் அவன்.
“ஆம்! அது முடியாத ஒன்று!” என்றார் மன்னர்.
“இயலாததை செய்து முடிப்பவன்தான் அறிவாளி! அக்பரின் தர்பாரில் உலகிலேயே சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சொன்னீர்களே! அத்தகைய தலைசிறந்த அறிவாளிகள் நாங்கள் கேட்டதை செய்யட்டுமே!” என்று திமிராகக் கேட்டான் அவன். மன்னரும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார்.

 

சில நாள்கள் கழித்து, வீரசிம்மன் நன்கு பேசவல்ல ஒரு தூதனை கை நிறைய வெகுமதிகளுடன் அக்பரிடம் அனுப்பினார். வீரசிம்மனின் தூதன் அக்பரின் தர்பாரில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, தனது மன்னர் கொடுத்தனுப்பியிருந்த வெகுமதிகளை அக்பரிடம் சமர்ப்பித்துவிட்டு, மன்னரின் வாழ்த்துகளையும் தெரிவித்தான்.
“வீரசிம்மன் நலமாக இருக்கிறாரா?” என்று அக்பர் வினவினார். “சக்கரவர்த்தியின் தயவு இருக்கும் போது எங்கள் மன்னரின் நலத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா!” என்றான் தூதன் பணிவுடன்.

 

“உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பாய்!” என்ற அக்பர், “மன்னரிடமிருந்து எனக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று கேட்டார். “பிரபு! உங்கள் தர்பாரில் பல அறிஞர்கள் நிறைந்துள்ளனர். அதனால் அறிவு நிரம்பிய ஒரு பானையை தயவு செய்து நீங்கள் கொடுத்தருளும் படி எங்கள் மன்னர் வேண்டிக் கொள்கிறார்“ என்றான் தூதன். அதைக் கேட்டு தர்பாரில் இருந்தவர் வியப்படைந்தனர்.
அறிவை எப்படிப் பானையிலிட்டு நிரப்ப முடியும்? ஆனால் அக்பர் அதைப் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை. தன் தர்பாரில் ஏராளமான அறிஞர்கள் இருக்கையில், இந்த விஷயத்தை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டார். அதனால் அவர் வீரசிம்மன் விரும்பிய பொருள் ஒரு மாதத்திற்குள் அனுப்பப்படும் என்று தூதனிடம் சொன்னார்.

 

“பிரபு! உங்கள் கருணைக்கு எல்லையே இல்லை! உங்களுடைய ஆதிக்கத்திலிருப்பதை எண்ணி எங்கள் மன்னர் பெருமைப்படுகிறார்” என்று தூதனும் சாமர்த்தியமாக அக்பர் மனம் குளிரும்படி பேசிவிட்டு, திரும்பிச் சென்றான்.
அவன் சென்ற பிறகு, அக்பர் தன் தர்பாரிலிருந்த அறிஞர்களை நோக்க அவர்களுள் ஒருவர் “பிரபு! வீரசிம்மன் கேட்டிருப்பதை கொடுக்க முடியவே முடியாது” என்றார். “முடியாதது என்று ஒன்றுமே கிடையாது. அதைக் கொடுத்தே ஆக வேண்டும்” என்று அக்பர் கோபத்துடன் கூறியதும், அனைவரும் பயத்தினால் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டனர்.
“பிரபு!” என்று மெதுவாக அழைத்தவாறே எழுந்த பீர்பால், “எனக்கு ஒரு பதினைந்து நாள் அவகாசம் கொடுங்கள். இந்த சவாலை நான் சமாளிக்கிறேன்” என்றார்.

“நிச்சயமாக இதை வெற்றிகொள்ள முடியுமா?” என்று அக்பர் கேட்டார்.
“நான் எப்போதாவது சொல்லிவிட்டு செய்யாமல் இருந்திருக்கிறேனா?” என்று பீர்பால் திருப்பிக் கேட்டதும்,
“நல்லவேளை! என்னுடைய தர்பாரில் நீ ஒருத்தனாவது அறிவாளியாக இருக்கிறாயே!” என்று பீர்பாலைப் புகழ்ந்து விட்டு மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்தார்.

 

அன்று மாலை வீடு திரும்பிய பீர்பால், தன் தோட்டத்தை நன்றாகப் பார்வையிட்டார். மற்ற காய்கறிச் செடிகளுடன், ஒரு பரங்கிக் கொடியையும் பார்த்தார். அதில் பல பூக்கள், பிஞ்சுகள், காய்கள் இருந்தன. உடனே வீட்டிற்குள் சென்ற அவர் ஒரு காலிப் பானையை எடுத்து வந்தார். அதைத் தரையில் வைத்து விட்டு, பரங்கிக் கொடியில் பிஞ்சுடன் கூடிய ஒரு பகுதியை அந்தப் பானையினுள் நுழைத்து பரங்கிப் பிஞ்சு பானைக்குள் இருக்குமாறு செய்துவிட்டு, கொடியின் நுனியை வெளிப்புறம் நோக்கி இழுத்து விட்டார். பார்ப்பதற்கு, பறங்கிக் கொடி பானையினுள் புகுந்து, பிறகு வெளியே வந்தது போல் இருந்தது.

 

“சரியாக இருக்கிறது!” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட பீர்பால், தன் மனைவியிடமும், தோட்டக்காரனிடமும் அந்தப் பானையையும், பரங்கிக் கொடியையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னார். தினமும் அவர் தோட்டத்திற்கு வந்து பானையினுள் இருந்தப் பரங்கிப் பிஞ்சைப் பார்வையிட்டு வந்தார். பத்து நாள்களில் பிஞ்சு காயாகிப் பெருத்தது. அப்படியே விட்டு வைத்தால் காய் இன்னும் பெரிதாக வளர்ந்து பானையை உடைத்து விடும் என்ற நிலை வந்த போது, பீர்பால் பானைக்குள் சென்று, வெளியே வந்த கொடியின் பாகங்களைக் கத்தியால் அறுத்து விட்டார். இப்போது பானைக்குள் நன்கு வளர்ந்த பறங்கிக்காய் மட்டுமே இருந்தது. பானையின் வாயினை துணியினால் இறுக மூடி அடைத்த பீர்பால் பின்னர், அதை தர்பாருக்கு எடுத்துச் சென்றார்.

 

அக்பரிடம் பானையை அளித்த பீர்பால், “பிரபு… இதுதான் மன்னர் வீரசிம்மன் விரும்பிய அறிவுப்பானை! இதை அவரிடம் அனுப்பி வையுங்கள்” என்றார். அதைக் கண்ட அக்பர், “என்ன, பீர்பால்! விளையாடுகிறாயா? பானையில் எப்படி அறிவை நிரப்ப முடியும்? இதற்குள் உண்மையில் என்ன இருக்கிறது?” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.
“பிரபு, அறிவுப்பானைக்குள் அறிவுதான் இருக்கும். வீரசிம்மன் பானைக்குள் இருக்கும் அறிவை எடுத்துக் கொண்டு, பானையை திருப்பி நமக்கு அனுப்பி விட வேண்டும். அதை வெளியில் எடுக்கும் போது அது நசுங்கக் கூடாது. பானையும் உடையக் கூடாது. ஒருக்கால் பானை உடைந்து போனால், வீரசிம்மன் பத்தாயிரம் பொற்காசு அபராதம் செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பீர்பால்.

“என்ன? அபராதம் பத்தாயிரம் பொற்காசுகளா?” என்று அக்பர் கேட்டார்.

“அறிவின் விலை மிகவும் அதிகம் பிரபு” என்றார் பீர்பால்.

அவ்வாறே பானையை தூதன் மூலம் கொடுத்தனுப்பியபின், ஆர்வத்தை அடக்க முடியாத அக்பர், “பீர்பால்! பானைக்குள் என்னதான் வைத்திருக்கிறாய் என்று எனக்கு கூறு” என அவசரப்படுத்தினார்.
உடனே பீர்பால் தான் செய்ததைச் சொன்னார். “பிரபு, வீரசிம்மன் தனது குறும்புத்தனமான கேள்விக்கு சரியாக மூக்குடைப்படுவார். பானைக்குள் இருக்கும் பரங்கிக்காயை அவரால் பானையை உடைக்காமல் முழுதாக வெளியே எடுக்க முடியாது. பரங்கிக்காயை அறுத்து வெளியே எடுப்பதும் கூடாது. அதனால் அவர் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

 

“அடப்போக்கிரி!” என்று பீர்பால் முதுகில் செல்லமாகத் தட்டினார் அக்பர். பானையைப் பெற்ற வீரசிம்மன் பானையினுள் ஒரு பெரிய பரங்கிக்காய் இருப்பதைப் பார்த்தார். கூடவே அந்த இரண்டு நிபந்தனைகளையும் கேட்டார். பரங்கிக்காயை அறுக்கவும் கூடாது. அதே சமயம் முழுதாக வெளியே எடுக்க முயன்றால் பானை உடையும். உடனே அந்த அதிகப் பிரசங்கி இளைஞர்களை அழைத்த மன்னர், அறிவுப்பானையை அவர்களிடம் காட்டி விளக்க, அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது

“உங்கள் பேச்சைக் கேட்டு நானும் முட்டாள் ஆனேன். முன்னமே சொன்னேன், அக்பரின் சபையில் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை என்று. என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை. அபராதத் தொகையை ஈடுகட்ட, நீங்கள் காலம் முழுவதும் என்னிடம் சம்பளமின்றி உழைக்க வேண்டும்” என்றார்.

 

பிறகு தலைவிதியை நொந்து கொண்டு, அபராதத் தொகையை அக்பருக்கு அனுப்ப, அவர் அதில் பாதியை பீர்பாலுக்கு வழங்கினார்.

Leave a comment