சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர்.
ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர்.
“வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்” என்றார் ஜாலிம்கான்.
“நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்துஇருக்கிறோம்” என்ற அவர்கள், “பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றனர்.
“பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!” என்றார் ஜாலிம்கான்.
வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்களுடைய ரகசியத் திட்டத்தைக் கூறினார். அதைக்கேட்டதும் ஜாலிம்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். தனக்கு யோசனை கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின், அக்பருக்கு சிகிச்சையளிக்கச் சென்றார். அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார்.
‘ஜாலிம்கான் அக்பரை கவனமாக சோதித்தார். அவருக்கு ஏற்பட்டு இருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் அக்பரை சோதித்துப் பார்த்தபின், மிகவும் கவலைப்படுவது போல் சற்று நேரம் பாசாங்கு செய்தார். அதன் பிறகு அவர் அக்பரிடம், “பிரபு! உங்களுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல்! அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது. ஆனால் காளை மாட்டின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்தான் விரைவில் குணம் அடைவீர்கள் அதனால் தான் கவலைப்படுகிறேன்” என்றார்
“காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்டார் அக்பர்.
“பால் தரும் காளை மாடுகளும் இருக்கின்றன பிரபு! ஆனால் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்” என்றார் ஜாலிம்கான். “யார் அதைக் கண்டு பிடிப்பது?” என்று அக்பர் கவலையுடன் கேட்க, “ஏன் பிரபு? நமது பீர்பால் மிகவும் புத்திசாலி! அவரால் முடியாத காரியமே எதுவும் இல்லை”என்றார் ஜாலிம்கான்.
“பீர்பாலால் பால் தரும் காளை மாட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?” என்று அக்பர் சந்தேகத்துடன் ஜாலிம்கானிடம் கேட்டார். “அத்தகைய காளை மாட்டை இந்த உலகில் யாராவது ஒருத்தரால் கண்டு பிடிக்க முடியும் எனில் அது பீர்பால் மட்டுமே!” என்று கூறிய வைத்தியர், “பிரபு! நீங்கள் ஒரு வாரம் ஓய்வெடுங்கள். இந்த மருந்தை ஒரு நாளைக்கு நான்கு முறை காளை மாட்டுப் பாலில் கலக்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமாகிவிடுவீர்கள்” என்று சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார் ஜாலிம்கான்.
உடனே, பீர்பால் அக்பர் முன் வரவழைக்கப்பட்டார். “எப்படிஇருக்கிறீர்கள், பிரபு?” என்று பீர்பால் கேட்க, “நீதான் பார்க்கிறாயே பீர்பால்! எனக்குக் கடுமையான காய்ச்சல்! வைத்தியர் மருந்து தந்திருக்கிறார். ஆனால் அதைக் காளை மாட்டுப் பாலில் குழைத்து சாப்பிட வேண்டுமாம்,” என்றார் அக்பர். “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்ட பீர்பால், “காளை மாடு பால்தரும் என்று எந்த மடையன் சொன்னான்?” என்று கேட்டார்.
“ஏன்? வைத்தியர் ஜாலிம்கான் சொன்னார்! அதுவும் உன் ஒருவனால்தான் காளை மாட்டின் பால் கொண்டுவரமுடியும் என்பதையும் உறுதியாகச் சொன்னார்” என்றார் அக்பர். “அப்படியென்று ஜாலிம்கான் சொன்னாரா?” என்று பீர்பால் கேட்டார். “ஆம்!” என்றார் அக்பர்.
தன்னை சிக்கலில் ஆழ்த்தி அவமானப்பட வைக்க ஜாலிம்கான் செய்த சூழ்ச்சி என்று பீர்பாலுக்கு உடனே தெரிந்து விட்டது. பீர்பால் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு சென்றார். விரைவிலேயே அவர் மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியது. உடனே, வீட்டுக்குச் சென்ற பீர்பால் புத்திசாலியான தன் மகளை அழைத்து அரண்மனையில் நடந்ததைக் கூறி, சிக்கலிலிருந்துத் தப்பிக்கத் தான் யோசனை செய்துள்ள திட்டத்தையும் கூறினார்.
அதைக் கேட்ட அவரது மகள் “கட்டாயம் செய்கிறேன் அப்பா!” என்றவள் “அந்த ஜாலிம்கானுக்கு உங்கள் மீது பொறாமையா?” என்று கேட்க, “அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்குப் பொறாமை! இருக்கட்டும்! நீ நான் சொன்னபடி இன்றிரவே செய்!” என்றார் பிர்பால்.
நடு இரவும் வந்தது. பீர்பாலின் மகள் ஒரு வேலைக்காரியை உடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள். அக்பருடைய அரண்மனைக்கருகே உள்ள படித்துறையைத் தேர்ந்தெடுத்த அவள், தன்னுடன் கொண்டு வந்திருந்த துணிகளை ஆற்றில் அலசித் துவைக்கத் தொடங்கினாள். அக்பரின் படுக்கை அறைக்கு மிக சமீபத்தில் அந்தப் படித்துறை இருந்ததால், பீர்பாலின் மகள் ஓங்கி ஓங்கித் துணிகளை படியில் அடித்த சத்தம் நடுநிசி வேளையில் மிகவும் உரக்கக் கேட்டது. அது போதாதென்று, வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துக்கொண்டே பேசினாள்.
அந்த சத்தத்தில் அக்பரின் தூக்கம் கலைந்து போயிற்று. நடு இரவில் யார் இப்படி சத்தம் போடுவது என்று கோபமுற்ற அக்பர் உடனே ஒரு காவற்காரனை அனுப்பினார். காவற்காரனும் யார் அவ்வாறு சத்தம் போடுவது என்றறிய அரண்மனையை விட்டு வெளியே வந்தான். ஆற்றங்கரையில், நடு இரவில், ஓர் இளம்பெண் வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும், துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டுஇருந்ததையும் பார்த்து கோபமுற்றான்.
அவன் அவளைத் திட்டிக் கொண்டே நெருங்கி, “முட்டாளே, நீ என்ன பைத்தியமா? இரவு நேரத்தில் யாராவது துணி துவைப்பார்களா?” என்று தன் ஈட்டியை ஆட்டிக் கொண்டே கேட்டான்.
“ஏன்? இரவு நேரத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதா? பகலில்தான் இருக்குமா? இரவில் ஏன் துவைக்கக் கூடாது?” என்று பீர்பாலின் மகள் வாதம் செய்தாள். “உனக்கு அறிவில்லையா? பக்கத்தில் சக்ரவத்தியின் மாளிகை இருக்கிறது. பாவம், உன்னால் அவர் தூக்கம் கலைந்து விட்டது. நீ உடனே இங்கிருந்து போய்விடு” என்றான் காவலன்.
‘அப்புறம் துணிகளை யார் துவைப்பது? நீ செய்வாயா?” என்றாள் அவள். காவலன் கோபத்துடன், “அதிகப்பிரசங்கி! யார் நீ?” என்று கத்தினான். உடனே, அவள் சிரித்துக் கொண்டே “நான் ஒரு பெண்!” என்றாள். “திமிர் பிடித்தவளே! நீ யாருடைய பெண்?” என்றான் காவலன். “நான் என் அப்பாவுடைய பெண்!” என்று இடக்காக அவள் பதில் சொல்ல, காவலன் பொறுமையிழந்தான்.
“உன்னை சக்ரவத்தியிடம் இழுத்துப் போகிறேன். இதேபோல் அங்க பதிலளித்தால், அவர் உனக்கு சவுக்கடி கொடுப்பார்” என்று காவலன் அவளை இழுத்துக் கொண்டு அக்பரிடம் சென்றான். அக்பரின் முன் நிறுத்தப்பட்ட பீர்பாலின் மகளின் முகத்தில் பயம் துளிக்கூட இல்லை. புன்சிரிப்புடன் தைரியமாக அவள் நிற்க, காவலன் அவள் இரவில் துணி துவைப்பதைப் பற்றி அக்பரிடம் கூறினான். அக்பர் கோபத்துடன் “என்னம்மா? இரவில்தான் துணி துவைக்க நேரம் கிடைத்ததா? என்றார். “ஆமாம் பிரபு! பகலில் நேரம் கிடைக்கவில்லை. இன்று மாலைதான் என் அப்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு, துணிகளை துவைக்க இப்போது வந்தேன்” என்றாள் அவள்.
“என்ன உளறுகிறாய்?” என்றார் அக்பர் கோபத்துடன். “நான் உளறவில்லை பிரபு! உண்மையைத்தான் சொல்கிறேன். இன்று மாலைதான் என் அப்பாவுக்குக் குழந்தை பிறந்தது” என்றாள் அவள். “முட்டாளே! மறுபடியும் பைத்தியம் போல் உளறாதே! உன் அம்மாவுக்குக் குழந்தை பிறந்தது என்று சரியாகச் சொல்!” என்று சீறினார் அக்பர். “இல்லை பிரபு! என் அப்பாவுக்குத்தான் குழந்தை பிறந்தது” என்று தான் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள் அவள். “உனக்கு என்ன பைத்தியமா? உன் அப்பாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?” என்று எரிமலை போல் அக்பர் வெடித்தார்.
“இதில் கோபப்பட என்ன இருக்கிறது பிரபு? காளை மாடு பால் கொடுக்க முடியும் என்றால், ஓர் ஆணினால் குழந்தையைப் பெற முடியாதா?” என்று அவள் கேட்டவுடன், அக்பருக்கு ‘சுரீர்’ என்று உறைத்தது. உடனே, அவருக்கு விளங்கிவிட்டது. அவர் கோபம் எல்லாம் குறைந்து விட்டது.
“பெண்ணே! நீ பீர்பாலின் மகளா?” என்று அக்பர் கேட்டார். “ஆம், பிரபு!” என்றாள்.
“பீர்பாலைத் தவிர வேறு யாருக்கு இப்படியெல்லாம் யோசனை தோன்றும்… பெண்ணே! பீர்பாலை வீணாக காளை மாட்டின் பாலைத் தேடி அலையவேண்டாம் என்று சொல்! அதை நீயே கொடுத்து விட்டதாக சொல்!” என்ற அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவள் அவரை வணங்கி விட்டு வீடு சென்றாள்.
அவள் சென்றபின் அக்பர் தனக்குத்தானே நினைத்தக் கொண்டார். “சே! இந்த ஜாலிம்கான் பீர்பாலை சிக்க வைக்க வேண்டும் என்றே காளை மாட்டின் பால் கொண்டு வரச் செல்லி என்னையும் முட்டாள் ஆக்கி விட்டான்” ஒரு பொண்ணின் முன்னால் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்” என்று எண்ணிய அக்பருக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது.
மறுநாள் ஜாலிம்கான் வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளால் அக்பரிடம் திட்டு வாங்கினார்.
Category: அக்பர் பீர்பால் கதைகள்
No Comments