அக்பர் பீர்பால் கதைகள் – குழந்தையின் அழுகை

4.7/5 - (23 votes)

அக்பர் சக்கரவர்த்தியைக் காக்காய் பிடிப்பதற்காக அவருடைய சில அதிகாரிகள் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய செயலைக் கண்டு முகம் சுளித்த பீர்பல், ‘இவர்கள் அக்பரின் பணிஆளர்களா, இல்லை எதற்கெடுத்தாலும் வாலையாட்டும் நாய்களா?’ என்று எண்ணினார். தன் மனத்தில் தோன்றியதை ஒருநாள் அவர்களிடம் பீர்பல் கூறிவிட, அவர்கள் வெகுண்டனர். “பீர்பல்! என்ன தைரியம் இருந்தால் எங்களை நாய்கள் என்று குறிப்பிடுவாய்! நீ எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!” என்று கோபத்தில் எகிறிக் குதித்தனர்.

 “ஏன் உங்களை நாய்கள் என்று சொல்லக்கூடாது?” என்று பீர்பல் கேட்டதும், “நாங்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள்!” என்றனர். “அதுதான் தெரிகிறதே!” என்றார் பீர்பல் ஏளனத்துடன்! “அப்படியெனில் ஏன் எங்களை நாய்கள் என்று சொல்கிறாய்?” என்று கேட்டனர்.
 “தவறுதான்! ஏனெனில் நாய்களுக்கு வால் உண்டு. உங்களுக்கில்லை!” என்றார் பீர்பல். “நாக்கை அடக்கிப் பேசு!” என்று அவர்கள் சீறி விழ, “நான் என்ன பிரமாதமாக சொல்லிவிட்டேன் என்று நீங்கள் இப்படி கோபத்தில் குதிக்கிறீர்கள்? உங்களுக்கு தைரியம் இல்லை என்றும், நீங்கள் கோழைகள் என்றும் கூறுகிறேன். அது தவறா?” என்றார் பீர்பல்.
 “சரி, அதைவிடு! நாங்கள் பயந்தாங்கொள்ளிகளாகவே இருந்து விட்டுப் போகிறோம். ஆனால் நீ எங்களை விட தைரியசாலியா?” என்று ஒருவன் பீர்பலிடம் கேட்டான். “ஆமாம், சந்தேகம் இல்லாமல்!” என்று மார்தட்டிய பீர்பல், “உங்களுக்கு என் தைரியத்தை நான் எந்த விதத்தில் நிரூபித்துக் காட்டவேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள்!” என்றார். “முன்கூட்டியே சக்கரவர்த்தியிடம் அனுமதி பெறாமல் தர்பாருக்கு உன்னால் தாமதமாக வரமுடியுமா?” என்று ஒருவர் சவால் விட்டார்.
அக்பர் சபைக்கு வருமுன்னரே, மற்றவர்கள் வந்துவிட வேண்டும் என்பது அக்பரின் கட்டளை! அப்படி யாராவது குறித்த நேரத்தில் வர முடியவில்லையெனில், தாமதமாக வருவதற்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும். அந்த நியதியை மீறுபவர்களின் மீது சக்கரவர்த்தி கடுமையான நடவடிக்கை எடுப்பதுஉண்டு. இந்த விஷயம் பீர்பலுக்கும் தெரியும். ஆயினும், முன் வைத்த காலைப் பின் வைக்க மனமின்றி, “சரி! நாளைக்கு நான் முன் அனுமதிஇன்றி தாமதமாக சபைக்கு வந்துக் காட்டுகிறேன்!” என்று கூறினார்.
நாளைக்கு பீர்பலுக்கு சக்கரவர்த்தி கடுமையான தண்டனை விதிப்பார் என்று எண்ணியவாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். மறுநாள் அக்பர் தர்பாரில் நுழைந்த போது, பீர்பலைத் தவிர மற்றவர் அனைவரும் ஏற்கெனவே வந்து இருந்தனர். அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்திய பிறகு தங்களுடைய ஆசனங்களில் அமர்ந்தனர். அக்பரும் தன் ஆசனத்தில் அமர்ந்தார். பிறகு சபையோரை ஒருமுறை பார்த்த அக்பர் அவர்களில் பீர்பல் மட்டும் இல்லாததை உணர்ந்தார்.
“பீர்பல் ஏன் வரவில்லை? ஏதாவது தகவல் அனுப்பியிருக்கிறாரா?” என்று அக்பர் சபையோரைக் கேட்டார். உடனே, சபையில் ஒருவர் எழுந்து, “இல்லை, பிரபு!” என்றார். “தர்பாருக்கும் வரவில்லை; தகவலும் அனுப்பவில்லை! அவரை இங்கு அழைத்து வர ஆள் அனுப்புங்கள்!” என்று அக்பர் உத்தரவிட்டார். பீர்பலை அழைத்து வரச் சென்ற ஆள் சிறிது நேரத்தில் திரும்பினான்.
“பிரபு! அவருடைய குழந்தை அழுது அடம் பிடிக்கிறதாம்! அதை சமாதானப்படுத்திய பிறகு வருவதாகக் கூறினார்!” என்றான் அவன். “என்ன திமிர் இருந்தால் பீர்பல் இப்படி ஒரு பதிலை அனுப்புவான்! மிகவும் கெட்டிக்காரனான பீர்பலுக்கு அழுகின்ற குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லையா? இது நம்புகிற மாதிரி இல்லையே!” என்றார் அக்பர்.
பிறகு கோபத்துடன், “பீர்பல் உடனே இங்கு ஆஜராக வேண்டும் என்று என் கட்டளையைத் தெரிவியுங்கள்! அப்படியும் ஏதாவது சமாதானம் கூறினால், அவரைக் கட்டியிழுத்து வாருங்கள்!” என்று என்று பணியாளரிடம் உத்தரவிட்டார். அவர் கோபத்துடன் கட்டளைப் பிறப்பிக்கும்போதே, பீர்பல் அவசர அவசரமாக சபைக்குள் நுழைந்தார். பீர்பலை தலையோடு கால்வரை உற்று அக்பர் உற்று நோக்கினார்.
“என்னை மன்னித்து விடுங்கள் பிரபு! என்னுடைய மூன்று வயதுக் குழந்தை காலையிலிருந்து தொடங்கி அடம் பிடித்து அழுது கொண்டேயிருக்கிறது. அதை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அதனால்தான் என்னால் தர்பாருக்குக் குறித்த நேரத்தில் வர முடியவில்லை. என் குழந்தை இன்னமும் அழுது கொண்டேயிருக்கிறது!” என்றார் பீர்பல்.
“உன்னால் ஒரு குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லை என்பதை நான் நம்ப மாட்டேன்!” என்றார் அக்பர். “நான் நடந்ததைக் கூறுகிறேன், கேளுங்கள்! காலையில் எழுந்தவுடன் என் குழந்தை கரும்பு கேட்டது, நானும் வாங்கித் தந்தேன். அதைப் பிழிந்து சாறு தரும்படிக் கேட்டது. நானும் அவ்வாறே செய்து ஒரு கோப்பையில் ஊற்றிக் கொடுத்தேன்.
உடனே கோப்பையிலிருந்த கரும்புச் சாற்றைத் தரையில் கொட்டிவிட்டு, தரையில் ஓடும் சாற்றை மீண்டும் கோப்பையில் எடுத்துத்தரச் சொல்லிப் பிடிவாதம் செய்தது. அது என்னால் எப்படி முடியும்? அது முடியாத காரியம் என்று சொன்னாலும் கேட்கவில்லை.
அதனால்தான் எனக்கு தாமதமாகி விட்டது!” என்று பீர்பல் பரிதாபமாகக் கூறினார். “ஒரு குழந்தையை சமாதானப் படுத்த சாமர்த்தியமற்ற உன்னைப் போய் பிரதம ஆலோசகனாக நியமித்துக் கொண்டேனே!” என்று அக்பர் விமரிசனம் செய்தார்.
“பிரபு! உலகிலேயே மிகக் கடினமான காரியம் அது ஒன்று தான்! நீங்கள் எப்போதாவது அழும் குழந்தையை சமாதானம் செய்து இருக்கிறீர்களா?” என்று பீர்பல் கேட்டார். தொடர்ந்து, “எங்கே! சற்று முயற்சி செய்து பாருங்களேன்! நான் இப்போது ஒரு குழந்தை போல் நடிக்கிறேன். நீங்கள் என்னை சிரிக்க வையுங்கள்!” என்றார். அதற்கு அக்பரும் சம்மதித்தார்.
உடனே, பீர்பல் தரையில் படுத்துக் கொண்டு குழந்தையைப் போல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுவது போல் நடித்தார். அக்பரும் சிம்மாசனத்தில்இருந்து இறங்கி வந்து “அழாதே பாப்பா! உனக்கு என்ன வேண்டும்?” என்று கெஞ்சினார். “ஹூ…ஹூ! எனக்கு தங்க மோதிரம் வேண்டும்!” என்று பீர்பல் குழந்தைக் குரலில் கேட்டார். உடனே, அக்பர் தன் விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்றி பீர்பலின் விரலில் அணிவித்தார். ஆனால், மறுபடியும் பீர்பல் குழந்தையின் குரலில் உரக்க அழுதார்.
“எனக்கு ஒரு யானை வேண்டும்!” என்று கத்த, அக்பர் உடனே ஒரு யானையை வரவழைக்கச் செய்தார். அதன்பிறகும், பீர்பல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதார். “இந்த மோதிரத்தினுள் யானை நுழைந்து வெளியே வரவேண்டும்! ஹூ…ஹூ!” என்று கத்தினார். தலையைப் பிடித்துக் கொண்ட அக்பர், “ஐயோ! உன்னை என்னால் சமாதானப் படுத்த முடியாது!” என்று கூவ, “இப்போதாவது புரிந்ததா பிரபு! அடம் பிடித்து அழும் குழந்தையை சமாதானம் செய்வது மிகவும் கடினம்!” என்றார் பீர்பல்.
அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அக்பர், “பீர்பல்! நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!” என்றார். பீர்பலுக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அதிகாரிகளின் முகத்தில் அசடு வழிந்தது.

One Comment

  1. Lokeshb
    Good story i am liked
    Reply December 8, 2014 at 4:11 pm

Leave a comment