அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் ‘அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்’ என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். “அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் ‘வாக்கிங்’ போய் விட்டது.
மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து ‘இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு’ என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. ‘நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி’ என்று உறுமினான்.
சேவகன் சொன்னான். ‘மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?’ என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட ‘எஸ்கேஏஏஏஏ..ப்’ ஆகிவிட்டார் என்று கேள்வி!!!
Category: சிறுவர் கதைகள்
No Comments