சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும் ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக இருந்தது.
நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர்.
“முத்தனாரே! அரசவையில் இருந்துதானே வருகிறீர். ஏதேதோ தீய செய்திகளைக் கேள்விப் படுகிறோமே. மக்கள் கூட்டமாக அழுது புலம்புகிறார்களே. நாடெங்கும் இதே பேச்சாக உள்ளதே. உண்மையா?”
“இளவழகனாரே! நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான். அதனால்தான் சோழ நாடே அவலத்தில் ஆழ்ந்து உள்ளது. நகர வீதிகளில் எங்கும் அழுகை ஒலி கேட்கிறது.”
“முத்தனாரே! எல்லாம் அறிந்தவர் நீங்கள். அரசவையில் என்ன நிகழ்ந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“தன்மானம் மிக்கவர் நம் அரசர். புதல்வர்களால் மானத்திற்கு இழுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார். அதனால்தான் வடக்கிருந்து உயிர் விடும் முடிவுக்கு வந்து விட்டார்.”
“எங்கு தான் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் பிணக்கு இல்லை.”
“இளவழகனாரே! நம் அரசர் நீதிநெறி தவறாதவர். வீரம் மிக்கவர். எல்லா நாட்டு அரசர்களும் மதித்துப் போற்றும் நற்பண்பாளர்.
ஆனால் அவருக்குப் பிறந்த மக்கள் இருவருமே தீயவர்களாக உள்ளனர். அவர்களைத் திருத்த அரசரும் தம்மாலான முயற்சி செய்தார். முயற்சி பயன் ஏதும் தர வில்லை. தீயவர்களான அவர்கள் தந்தையையே வெறுக்கத் தொடங்கினார்கள்.”
“நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்த செய்திதானே இது.”
“இளவழகனாரே! இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் அரசரை எதிர்த்தனர் அவர் மக்கள். அவருடன் போர் செய்யத் துணிந்து விட்டார்கள்.
அந்தத் தீயவர்களுக்கு ஆதரவாகப் புல்லர்கள் சிலரும் துணை நின்றனர்.
இதைக் கேட்ட அரசர் கோபத்தால் துடித்தார்.
“என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டார்களா என் மக்கள்? அவர்களை இந்த வாளுக்கு இரையாக்குவேன்” என்று போருக்கு எழுந்தார்.
சினம் கொண்ட அவரைப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்தார்.”
“முத்தனாரே! தீயவர்களைக் கொன்று ஒழிப்பது அரச நீதிதானே. எதற்காகப் புலவர் எயிற்றியனார் குறுக்கிட்டார். அவர் என்ன சொன்னார்.?”
“அரசே! நீங்கள் யாரோடு போரிடச் செல்கிறீர்கள்? உங்கள் மக்களுடனா? உங்களுக்குப் பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்கள்தானே.
அவர்களை வென்ற பின் யாருக்கு இந்த நாட்டைத் தரப் போகிறீர்கள்?
இந்த வெற்றியால் உங்களுக்குப் புகழ் வருமா? போரில் தன் மக்களையே கொன்றான் சோழன். இப்படித்தான் உலகம் உங்களை ஏசும். இந்தப் போரில் தோற்றாலோ மாறாகப் பழிதான் உங்களைச் சூழும்.
நான் சொல்வதை எண்ணிப் பாருங்கள். போரில் வென்றாலும் பழிதான். தோற்றாலும் பழிதான் என்றார் எயிற்றியனார்.”
“முத்தனாரே! இதைக் கேட்ட அரசர் என்ன செய்தார்?”
“கோபத்தை அடக்கிக் கொண்ட அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.
“புலவரே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் போ‘ரில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பழிக்கு ஆளாவேன். இதிலிருந்து நான் மீள வழியே இல்லை.என் மக்களின் பொருந்தாச் செய்கையினால் பழிக்கு ஆளாகிவிட்டேன். இந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கப் போகிறேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்று உறுதியுடன் சொன்னார்.”
“ஆ! நம் அரசரா அப்படிச் சொன்னார்?”
“அரசர் சொன்னதைக் கேட்டு அவையில் இருந்த எல்லோரும் கலங்கி விட்டனர்.”
“முத்தனாரே! வடக்கிருத்தால் என்றால் என்ன?”
“பெரியவர்கள் தங்கள் மானமே பெரிது என்று கருதுவார்கள். மானத்திற்குச் சிறிது இழிவு வந்தாலும் உயிரை விடத் துணிவார்கள். அப்படி உயிரைத் துறக்கின்ற முறைக்கு வடக்கிருத்தல் என்று பெயர்.
வடக்கிருத்தலுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பார்கள். அங்கே வடக்கு நோக்கி அமர்வார்கள். உண்ணா நோன்பு இருந்து உயிரை விடுவார்கள்.அது மட்டும் அல்ல. அவருக்காக உயிரை விட முன்வருபவர்களும் அவரோடு வடக்கு இருப்பார்கள்.”
“முத்தனாரே! உண்ணா நோம்பிருந்து உயிர்விடும் முறையா வடக்கிருத்தல். மிகக் கடுமையாக உள்ளதே.”
“இளவழகனாரே! அரசர் வடக்கிருக்கும் இடத்தைப் புலவர் பொத்தியார் தேர்ந்து எடுத்தார்.
அரசரும் அங்கே சென்று வடக்கிருக்க அமர்ந்து விட்டார். புலவர்கள் பலரும் அவருடன் சென்று விட்டனர்.
செய்தி அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.”
“முத்தனாரே! நம் அரசரின் பெருமை யாருக்கு வரும்? வடக்கிருக்கும் போதும் நண்பர்கள் சூழ இருக்கிறாரே.”
“இளவழகனாரே! நானும் அரசருடன் வடக்கிருக்கத்தான் செல்கிறேன்” என்று புறப்பட்டார் முத்தனார்.
வடக்கிருப்பதற்காகப் பெரிய திடலைத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள்.
அதன் ஒரு பக்கத்தில் கோப்பெருஞ் சோழன் அமர்ந்து இருந்தார். அவர் அருகே புலவர் பொத்தியார் உள்ளார். பல புலவர்கள் நெருக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.
திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக அமர்ந்து உள்ளனர்.
“அரசே! இவ்வளவு பெரிய திடலில் எத்தனை பேர் என்று பாருங்கள். எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து உள்ளனர். நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் நீங்கள். அதற்கு இதுவே நல்ல சான்று” என்றார் பொத்தியார்.
“பொத்தியாரே புலவர்கள் பலரும் என்னுடன் நெருக்கமாகவே அமர்ந்து உள்ளீர்கள். வடக்கிருக்கும் போதும் உங்களுடன் இலக்கியச் சுவை நுகருகின்றேனே. என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
என் வேண்டுகோள் ஒன்று. எனக்காக நீங்கள் அனைவரும் ஓர் உதவி செய்ய வேண்டும்.”
அங்கிருந்த புலவர்கள் திகைத்தனர்.
“அரசே! எங்களை வடக்கிருக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். உங்கள் கட்டளை வேறு எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறோம்” என்றார் பொத்தியார்.
“புலவர்களே! பெரும்புலவர் பிசிராந்தையார் என் உயிர் நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார். அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள்” என்றார் அரசர்.
இதைக் கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.
“அரசே! நீங்கள் சொல்வது பாண்டிய நாட்டுப் புலவராகிய பிசிராந்தையாரைத்தானே. அவர் தம் ஊராகிய பிசிரை விட்டு அதிகம் வெளியே வந்தது இல்லை.
பல ஊர்கள் சுற்றும் புலவர்கள் நாங்கள். அவர் பெயரைத்தான் கேட்டு இருக்கிறோம். அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்ததாகவும் எனக்குத் தெரிய வில்லையே” என்று கேட்டார் பொத்தியார்.
“நீங்கள் சொல்வது உண்மைதான். பிசிராந்தையார் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்தது இல்லை. நானும் பாண்டிய நாட்டிற்குச் சென்றது இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததும் இல்லை.”
“அரசே! நீங்களும் பிசிராந்தையாரும் சந்தித்தது இல்லை என்கிறீர்கள். பேசிப் பழகவில்லை என்கிறீர்கள்.
உங்களுக்காக வடக்கிருந்து உயிர் விட அவர் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்கி வையுங்கள் எனச் சொல்கிறீர்கள். அவர் இங்கே வருவாரா? எங்களால் நம்ப முடியவில்லையே” என்று கேட்டார் பொத்தியார்.
“பொத்தியாரே! நானும் பிசிராந்தையாரும் உள்ளம் ஒன்றுபட்ட உயிர் நண்பர்கள். என்னுடைய உள்ளம் அவர் அறிவார். அதே போல அவருடைய உள்ளத்தை நான் அறிவேன். நல்ல நட்பிற்கு, உயர்ந்த நட்பிற்குப் பேசிப் பழக வேண்டுமா?”
“அரசே! பேசாமல் பழகாமல் நட்பு எப்படி வளர முடியும்? உங்கள் பெருமையையும் புகழையும் பிசிராந்தையார் அறிந்து இருக்கலாம். அதே போல அவருடைய புலமைச்சிறப்பை நீங்கள் அறிந்து இருக்கலாம்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் அவர் உங்களுக்காக வடக்கிருக்க வருவார் என்கிறீர்களே. இதை என்னால் நம்ப முடியவில்லை.”
“பொத்தியாரே! பிசிராந்தையார் என்னை நண்பனாக விளித்துப் பாடல் எழுதி உள்ளார். நானும் அவருக்கு மடல் எழுதி உள்ளேன். மடல் வழியாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம்.
நல்ல நட்பிற்குப் புணர்ச்சி பழகுதல் வேண்டா. இது உங்களுக்குத் தெரியாதா? எனக்காக உயிரை விட பிசிராந்தையார் இங்கே வருவார். இது உறுதி. என் அருகில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.”
“அரசே! பிசிராந்தையார் இங்கு வருவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வடக்கிருக்கும் செய்தி அவரை அடைய இரண்டு திங்களாவது ஆகும். இல்லக் கடமைகளை எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் புறப்பட முடியும். இங்கு வர மேலும் சில நாட்கள் ஆகும்.
அதற்குள் நீங்கள் விண்ணுலகம் சென்று விடுவீர்கள். அவர் வந்தாலும் உங்களைச் சந்திக்க முடியாது.
இங்குள்ள இட நெருக்கடி உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலில் உங்களுக்கு அருகில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டுமா?”
“பொத்தியாரே! எங்கள் நட்பின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை. அவருடைய வருகைக்காக என் உள்ளம் துடிப்பது எனக்குத்தான் தெரியும். என் உயிர் நண்பர் வளமான காலத்தில் சந்திக்காமல் இருந்து இருக்கலாம். இப்பொழுது என்னைக் காண ஓடோடி வருவார்.”
“அரசே! என்னை மன்னியுங்கள். இட நெருக்கடியால்தான் மறுத்துப் பேச வேண்டி வந்தது. உங்களுக்கு அடுத்தே பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிதானே.”
“மகிழ்ச்சி பொத்தியாரே! என் மக்கள் மீது கொண்ட பிணக்கு. அதனால் ஏற்பட்ட சூழல்களால் உங்களை மறந்து விட்டேன்.
உங்கள் மனைவி கருவுற்று இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னீர்களே. குழவி பிறந்து விட்டதா? ஆண் குழவியா? பெண் குழவியா?”
“அரசே! பெற்ற மகவைப் பார்ப்பதா பேறு? உங்களுடன் உயிர் விடுவதே பெரும் பேறு.”
“பொத்தியாரே! வடக்கிருக்கும் மரபு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே. யார் யார் வடககிருக்கலாம். யார் யார் கூடாது என்ற விதி தெளிவாக உள்ளதே.
திருமணம் ஆகாதவர்கள். கருவுற்ற மனைவியை உடையவர்கள். அவர் வருவாயையே நம்பி இருக்கும் குடும்பத்தினர். இப்படிப்பட்டவர்கள் வடன்கிருத்தல் கூடாது.
வடக்கிருப்பவர்கள் இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்களாக இருக்க வேண்டும்.
மானத்திற்கு இழுக்கு வந்ததால் நான் வடக்கிருக்கிறேன். இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மட்டுமே என்னுடன் வடக்கிருக்க வேண்டும்.”
“அரசே! வடக்கிருக்கும் மரபை நான் நன்கு அறிவேன். இருந்தாலும்.”
“மனைவி கருவுற்று இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்தீர்? இதனால் எனக்குத்தானே பழி வந்து சேரும். உடனே இங்கிருந்து புறப்படுங்கள். மகவின் அழகிய திருமுகத்தைப் பாருங்கள். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். உங்கள் மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள். இல்லக் கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இங்கே வந்து வடக்கிருங்கள்.”
“அரசே! அறநெறிகளை விதிமுறைகளைச் சொல்லி என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள். உங்களுடனேயே வடக்கிருந்து உயிர்விட விரும்புகிறேன். என் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். இது என் அன்பு வேண்டுகோள்.”
“பொத்தியாரே! நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னரே வடக்கிருக்க வேண்டும். என் மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் இல்லத்திற்குச் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தையில் திருமுகத்தைக் கண்டு மகிழுங்கள். இல்லக் கடமைகளை முடித்து விட்டு இங்கே வாருங்கள். இது என் அன்புக் கட்டளை.”
“அரசே! உங்கள் அன்பை மீறும் ஆற்றல் எனக்கு இல்லை. இப்பொழுதே என் இல்லத்திற்குச் செல்கிறேன். நான் மீண்டும் இங்குத் திரும்பச் சில திங்கள் ஆகும்.
அப்பொழுது நீங்கள் விண்ணுலகம் சென்றிருப்பீர்கள். உங்கள் திருமுகத்தை என்னால் காண இயலாது. உங்கள் நினைவாகவே இங்கே வடக்கிருந்து உயிர் விடுவேன்” என்று கண்ணீர் வழிய புறப்பட்டார் பொத்தியார்.
கோப்பெருஞ் சோழனும் புலவர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள்.
கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி எங்க்ம் பரவியது. நாள்தோறும் பலர் அங்கு வந்து வடக்கிருந்தனர்.
சில நாட்களில் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்தார். வடக்கிருந்த இடத்திலேயே அவரை நல்லடக்கம் செய்தார்கள். அங்கே நடுகல் நட்டார்கள். அவரோடு வடக்கிருப்பவர்களும் ஒவ்வொருவராக இறந்தனர்.
மூன்று திங்கள் கழிந்தது- புலவர் பொதியார் அங்கு வந்தார். வடக்கிருக்கும் பெரியவர்கள் சிலர் அவரை வரவேற்றார்கள். தமக்கு உரிய இடத்தில் அவர் அமர்ந்தார்.
கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்க இயலவில்லையே” என்று கலங்கினார்.
“ஆ! நண்பனே! நற்பண்பாளனே! உலகம் போற்றும் புகழோனே! மானமே பெரிதென்று உயிர் துறந்தாயே! உன் புகழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்குமே!
கடமைகளை முடித்து விட்டு வரச் சொன்னாயே! அப்படியே வந்து விட்டேன். என்னை விட்டு எங்கே சென்றாய்?
இறக்கும் போது அருகில் இருக்கும் பேறு கிடைக்க வில்லையே. கொடியவனாகி விட்டேனே.
காலனே! நண்பன் இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என் உயிரையும் உடனே எடுத்துச் செல்” என்று புலம்பினார் அவர்.
அங்கிருந்த பெரியவர் ஒருவர், “புலவரே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. மானத்தின் பெருமை காக்க உயிர் விட்டார் நம் அரசர். நாமும் அவருக்காக உயிரை விட வந்து உள்ளோம்.
இங்கே அழுகை ஒலியோ புலம்பல் ஒலியோ கேட்க வேண்டாம்.
நம் அரசரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சொல்லுங்கள். வாழ்க்கையின் உண்மை நிலையினை விளக்குங்கள். நல்ல அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டே நாங்கள் பெருமிதத்துடன் உயிர் விடுகிறோம்” என்றார்.
“பெரியவரே! மன்னியுங்கள். எல்லை மீறிய உணர்ச்சியில் என்னேயே மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. உயர்ந்த குறிக்கோளுக்காக இங்கே உயிர் விட வந்துள்ளோம். அழுது புலம்பி அதன் மதிப்பைக் குறைக்க மாட்டேன்.
நிலையான மெய்ப் பொருள்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம். சாகும் போதும் இனிமையாகச் சாவோம்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் பொத்தியார்.
மறுநாள் அங்கே பெரியவர் ஒருவர் வந்தார்.
அறிஞரைப் போல அவர் தோற்றம் இருந்தது. நீண்ட பயணம் செய்தவரைப் போலக் காட்சி அளித்தார் அவர்.
வடக்கிருக்கும் போலக் காட்சி அளித்தார் அவர்.
“மதிப்பிற்கு உரியவரைப் போல இவர் தோற்றம் உள்ளது. யார் என்று கேட்போம்” என்று நினைத்தார் பொத்தியார். எழுந்து அவரை வரவேற்றார்.
“பெரியவரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? சொல்லுங்கள்? அப்பொழுதுதான் உங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்க முடியும்” என்றார் பொத்தியார்.
“ஐயா! நான் பாண்டிய நாட்டுப் புலவன். என் ஊர் பிசிர். பிசிராந்தையார் என்று என்னை அழைப்பார்கள். உயிர் நண்பர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி கிடைத்தது. வடக்கிருந்து உயிர் துறக்க நானும் இங்கு வந்தேன்.”
“ஆ! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெரும்புலவர் பிசிராந்தையாரா நீங்கள்? பாண்டியன் அறிவுடை நம்பி மக்களிடம் அதிக வரி வாங்கினான். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காகக் “காய்நெல் அறுத்து” என்ற பாடலை பாடினீர்களே? அரசர்கள் எப்படி வரி வாங்க வேண்டும். இதற்கு இலக்கணமாக அந்தப் பாடலையே பயன் படுத்துகிறார்களே.”
“நீங்கள் சொன்ன அத்தனைக்கும் உரியவன் அடியேன்தான். அன்பின் மிகுதியால் பலர் என்னை இப்படிப் புகழ்கிறார்கள். நீங்கள் யார் என்று சொல்ல வில்லையே?”
“பெரும்புலவரே! என் பெயர் பொத்தியார்.”
“புலவர் பொத்தியாரா! என் உயிர் நண்பருக்கு எல்லாமாக இருந்தவரா? உங்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. கோப்பெருஞ் சோழனுடன் நீங்களும் உயிர் துறந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.”
“நீங்கள் நினைத்தது போலத்தான் நடந்திருக்க வேண்டும். என் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் மகவு ஈன்ற பிறகு வருமாறு அரசர் கட்டளை இட்டார்.
“என் இல்லக் கடமைகளை முடித்து விட்டேன். வடக்கிருக்க நேற்றுத்தான் இங்கு வந்தேன். அப்படி நடந்ததும் நல்லதற்குத்தான் அதனால் உங்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்.”
கோப்பெருஞ் சோழன் தமக்கு அருகிலேயே உங்களுக்கு இடம் ஒதுக்கி வைத்துள்ளார். நீங்கள் இங்கே அமரலாம்.”
“பொத்தியாரே! எந்த இடம்? காட்டுங்கள்.”
“என் அருகில் உள்ள இந்த இடம்தான்.”
பிசிராந்தையார் அந்த இடத்தில் அமர்ந்தார்.
அருகிருந்த மற்ற புலவர்கள் அவரை வியப்புடன் பார்த்தார்கள்.
பொத்தியார் தயக்கத்துடன் “பெரும் புலவரே! எனக்கு ஓர் ஐயம்?” என்று கேட்டார்.
“எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.”
“நான் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பன். நான் அவரைப் பிரிந்ததோ அவர் என்னைப் பிரிந்ததோ இல்லை. நான் அறிந்து கோப்பெருஞ் சோழனை நீ சந்தித்ததோ பேசியதோ இல்லை.
உங்கள் பெரும்புலமையைப் அவர் அறிந்து இருக்கலாம். அவருடைய வள்ளன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் அறியாமலே நட்பும் கொண்டிருக்கலாம். மடல் வழியாக இருவர் நட்பும் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
பார்க்கலாம். பழகாமல் உங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு எப்படி மலர்ந்தது? எனக்கு வியப்பாக உள்ளது.”
“பொத்தியாரே! உயர்வுதான் நட்பிற்கு அடிப்படை. பேசுவதும் பழகுவதும் நட்பின் வெளிப்பாடுகள். உள்ளத்தால் கலப்பதே உயர்ந்த நட்பு.
நானும் கோப்பெருஞ் சோழனும் உள்ளத்தால் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால் உடலால் பிரிக்கப்பட்டு இருந்தோம். நீண்ட தொலைவு எங்களைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. அதனால் என்ன? உள்ளம் ஒன்றுபட்ட நாங்கள் மடல் வழியாக உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம்.
அவர் உள்ளத்தை நான் அறிவேன். என் உள்ளத்தை அவர் அறிவார். இணைந்த எங்கள் உள்ளங்கள் காலத்தாலோ நாட்டாலோ பிரிக்கப் படுவன அல்ல” என்றார் பிசிராந்தையார்.
“புலவரே! உங்களை வியப்பதா? அல்லது கோப்பெருஞ் சோழனை வியப்பதா? யாரை வியப்பது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன்.”
“பொத்தியாரே! என்ன சொல்கிறீர்?”
“என்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம் வையுங்கள் என்றார். நாங்கள் கோப்பெருஞ் சோழனிடம் எவ்வளவோ மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று உறுதியுடன் சொன்னார்.
அவர் சொன்னது போலவே நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். இருவரில் யார் செயலை வியப்பது என்று தான் குழப்பம்.”
“பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மை நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது?
என் நண்பர் வடக்கிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன்.
நான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை விரைந்து முடிந்தேன். இங்கு வந்தேன் அதற்குள் என் உணிர் நண்பர் விண்ணுலகம் சென்று விட்டார்.
காணாமலே காதல் என்பார்கள். பிறகு சந்தித்து உரையாடி மகிழ்வார்கள். என் நிலையைப் பாருங்கள். என் உயிர் நண்பரை நான் இதுவரை சந்தித்தது இல்லை.
அவருடைய உள்ளத்தை அறிவேன். அவர் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறியேன். இங்கு வந்ததும் அவரைச் சந்திக்க இயல வில்லை.
என் வருகைக்காக அவர் விண்ணுலகில் ஆவலுடன் காத்திருப்பார். விரைவில் என் உயிர் நீங்க வேண்டும். என் நண்பரைச் சந்தித்து மகிழ வேண்டும். இதுதான் என் ஆவல்” என்றார் பிசிராந்தையார்.
“பிசிராந்தையாரே! நீங்களும் கோப்பெருஞ் சோழனும் சிறந்த நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறீர்கள். இனி இந்த உலகமே உங்கள் நட்பைப் போற்றிப் புகழப் போகிறது. உங்கள் இருவர் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். உங்கள் காலத்தில் வாழும் பேறு பெற்றதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார் பொத்தியார்.
1. “எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
(புறநானூற்றுப் பாடல் 212, அடிகள் 15 முதல் 18 வரை, புல்லாற்றூர், எயிற்றியனார் பாடியது).
2. வடக்கிருத்தல்: – வடக்கிருத்தலாவது ஊர்ப் புறத்தே
தனியிடங்கண்டு அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப்
புல்லைப் பரப்பி அதன் மீதிருந்து உண்ணா நோன்பு
மேற்கொண்டு அறங்கூறும் தவம் செய்தலாகும்.
(புறநானூறு – இரண்டாம் தொகுதி – ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரை – கழக வெளியீடு)
3. தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே
(புறநானூற்றுப் பாடல் 215, பாடல் அடிகள் 6 முதல் 10 வரை)
4. இசை மரபாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும் வியத்தொறும் யிப்பிறந் தன்றே
(புறநானூற்றுப் பாடல் 217, பாடல் அடிகள் 5 முதல் 9 வரை)
Category: அரசர் கதைகள்
No Comments