பரமார்த்த குரு கதைகள் – குரங்கு விடு தூது!

4.6/5 - (15 votes)

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

“குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?” என்று கேட்டான், மட்டி

“மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!” என்றான் மடையன்.

“அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!” என்று யோசனை கூறினான், முட்டாள்.

“ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?” என்று கேட்டார், பரமார்த்தர்.

“பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?” எனக் கேட்டான், மண்டு.

“நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்” என்று விளக்கம் சொன்னான், மூடன்.

“இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்” என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர்.

அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. “சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, “லபக்” என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார், பரமார்த்தர்.

சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.

அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது.

அதைக் கண்ட பரமார்த்தர், “சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!” என்று கத்தினார்.

மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர்.

அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!” என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார்.

சீடர்களும், “ரங்கா, ரங்கா!” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

மடத்துக்கு வந்து சேர்ந்ததும், “நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்” என்றான் மட்டி.

“குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!” என்று அதை ஏவி விட்டான் முட்டாள்.

அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.

வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.

அதைக் கண்ட மடையன், “சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!” என்று மகிழ்ந்தான்.

“ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!” என்றான், முட்டாள்

பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, “நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன” என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு.

பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், “நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு” என்றான்.

சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள்.

ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள்.

அடுத்த கணம், “டமால், டுமீல்” என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது.

வாய் இழந்த சீடர்கள், “ஐயோ, ஆஞ்சநேயா!” என்று அலறிக் கொண்டு உருண்டனர்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், “இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார்.

“குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்” என்றனர் சீடர்கள்.

பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.

அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு….

அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.

பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.

“குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!” என்றான் மண்டு.

பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.

“இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்” என்று புகழ்ந்தான் மட்டி.

மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.

“வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!” என்று புறப்பட்டார், பரமார்த்தர்.

தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.

அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது.

“குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!” என்று புலம்பினார்கள் சீடர்கள்.

Leave a comment