ஷிர்டி சாய் பாபா பகுதி – 12

5/5 - (2 votes)
Temple images

ஆனால், அடுத்த கணம்தான் மாதவராவுக்கும் சரி… கூடியிருந்த மக்களுக்கும் சரி… பாபா சொன்ன வார்த்தைகளின் பொருள் புரியத் தொடங்கியது. உண்மையில் பாபா ஏறாதே! இறங்கு! என்று ஆணையிட்டது மாதவராவுக்கல்ல! மாதவராவின் உடலில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த கடுமையான விஷத்திற்கு! பஞ்ச பூதங்களுமே பாபாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்  என்னும்போது விஷம் என்ன பிரமாதம்? அதுவும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்? பாபாவின் ஆணைக்குப் பணிந்து, அடுத்த கணமே மாதவராவின் உடலில் ஏறிக்கொண்டிருந்த விஷம் சரசரவென இறங்கத் தொடங்கியது. கொட்டுவாயின் வழியாக விஷம் வெளியேறியதையும், மாதவராவ் உடல் நீல நிறம் மாறிப் பழைய நிறம் பெறத் தொடங்கியதையும் பார்த்துப் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். படிகளில் தடதடவென மேலே ஏறிச்சென்ற மாதவராவ், என்னைக் காப்பாற்றிய தெய்வமே! என்று பாபாவின் பாதங்களில் பணிந்தார்.

அடியவர்களைக்  காக்கும் அந்தத் தாமரைப்பூம் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினார். அவரை அள்ளியெடுத்த பாபா, என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்! என்றவாறே மாதவராவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தம் விரல்களால் துடைத்து விட்டார். அன்பே வடிவான பாபாவின் அளப்பரிய கருணையைக் கண்டு பக்தர்கள் நெகிழ்ந்தார்கள். இவ்விதம் பாபாவின் மகிமைகள் பரவினாலும், தொடக்க காலத்தில் ஷிர்டியிலும் சிலர் பாபாவைப் பைத்தியக்காரர் என நினைத்ததுண்டு! கானகத்தில் திரிவது, உடை பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது, பித்துப் பிடித்தாற்போல் மரத்தடிகளில் பல மணிநேரம் கண்மூடி அமர்ந்திருப்பது இதெல்லாம் பைத்தியக்காரரின் அடையாளங்கள் என்பது அவர்களின் எண்ணம். மகான்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் வெளித்தோற்றத்தில் அதிக வித்தியாசமில்லை என்பதை அவர்கள் அறியவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சரைக் கூடப் பைத்தியம் என்றுதானே தொடக்கத்தில் மக்கள் கருதினார்கள்! அவர் சாதாரணப் பைத்தியம் அல்ல, ஆன்மிகப் பைத்தியம்.. கடவுளை நேரில் தரிசித்துக் கடவுளாகவே மாறியவர் அவர் என்பதெல்லாம் மக்களுக்கு மெல்ல மெல்லத் தானே புரிய வந்தன! பாபாவைப் பைத்தியம் என நினைத்தார்கள் சில எண்ணெய் வியாபாரிகள்.

பாபாவைத் தேடி வெளியூரிலிருந்தெல்லாம் அடியவர்கள் வருவதைப் பார்த்து அவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த அற்புதமும் நிகழ்த்திக் காட்டப்படவில்லை. எனவே அவர்கள் பாபாவைத் தெய்வம் என நம்ப மறுத்தார்கள். ஆனால், அவர்களும் பாபாவைப் பூரணமாக நம்பி ஏற்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாபா, தன் மசூதியில் திசைக்கு ஒன்றாக நான்கு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். விளக்குகள் எரிய எண்ணெய் வேண்டுமே! தமக்கான உணவை யாசிப்பதுபோல, விளக்கிற்கான எண்ணெயையும் அவர் பல கடைகளில் யாசித்துப் பெறுவதுண்டு. தொடர்ந்து பாபாவுக்கு எண்ணெய் வணிகர்கள் மூலம் எண்ணெய் கிடைத்து வந்தது. ஒருமுறை பாபா எண்ணெய் கேட்டு வந்தபோது, அந்த வணிகர்கள் யோசித்தார்கள். இந்தப் பைத்தியத்திற்கு எண்ணெய் கொடுக்க வேண்டிய அவசியமென்ன? தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, எல்லா வியாபாரிகளுமே எண்ணெய் தர மறுத்துவிட்டார்கள். பாபாவின் மசூதியில் விளக்கெரிய எண்ணெய் தருவது மாபெரும் புண்ணியச் செயல் என்பதை அந்த அறிவிலிகள் அறியவில்லை. பாபா ஏற்றும் விளக்குகளால் தான் அந்த ஊரின் தீமைகள் சுட்டெரிக்கப்படுகின்றன என்பதையும் அவர்கள் உணரவில்லை.

பாபா தமக்கு எண்ணெய் தரப்படாததைப் பற்றி எதுவும் கூறவில்லை. புன்முறுவலோடு மசூதியை நோக்கி நடந்தார். வியாபாரிகள் கண்சிமிட்டித் தங்களுக்குள் நகைத்துக் கொண்டார்கள். இவர் இன்று எப்படி விளக்குகளை ஏற்றுவார் பார்க்கலாம் என்று சில வணிகர்கள் மசூதிக்கு வேடிக்கை பார்க்க வந்தார்கள். பாபா மண்பானையில் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரைக் குவளையில் எடுத்தார். பின் அந்தத் தண்ணீரை எல்லா விளக்குகளிலும் ஊற்றினார். அதன்பின் திரியை ஏற்றினார். பாபாவின் கட்டளைக்கு அந்தத் திரிகள் பணிந்தன. தண்ணீரை அவை எண்ணெயாகக் கருதத் தொடங்கின. எல்லா விளக்குகளும் தண்ணீரால் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தன. இதைப் பார்த்த எண்ணெய் வணிகர்கள் மனத்தில் அச்சம் தோன்றியது. ஊருக்குள் ஓடிச் சென்று மக்களிடமும் சக வணிகர்களிடமும் இந்த அற்புதம் பற்றி திகைப்புடன் விவரித்தார்கள். மக்களும் வணிகர்களும் பெருந்திரளாக ஓடோடி வந்து தண்ணீரால் விளக்குகள் எரியும் அதிசயத்தைக் கண்டு பிரமித்துப் போனார்கள். எல்லா வணிகர்களும் பாபாவின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். பாபா எண்ணெய் கேட்டது தனக்காக அல்ல. தங்களின் பாவங்களைப் போக்குவதற்காகத்தான் என்பதை அவர்கள் அப்போதுதான் புரிந்து கொண்டார்கள். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் பாபாவுக்குக் கட்டுப்பட்டவை என்ற பேருண்மையையும் அறிந்துகொண்டார்கள்.

பாபா கலகலவென்று நகைத்தார். எல்லோரையும் தட்டிக் கொடுத்தார். வேறு எதுவும் பேசவில்லை. அவர் பேசாத விஷயங்களையெல்லாம் தண்ணீரால் எரிந்துகொண்டிருந்த தீபங்கள் ஒளிமொழியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தன. தென்னகத்து மகானான வள்ளலார் வாழ்வில் கூட, அவர் தண்ணீரால் விளக்கேற்றிய சம்பவம் வருகிறதே! பக்தி என்னும் எண்ணெய் ஊற்றி அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானம் என்னும் சுடரை எரியச் செய்பவர்கள் அல்லவா மகான்கள்? ஒருநாள் மாலை மயங்கும் நேரம். ஒரு நீதிபதி பாபாவை தரிசிக்க வந்தார். பாபா உண்பதற்குஎன்று பிரியத்தோடு போண்டா பொட்டலம் வாங்கி வந்திருந்தார் அவர். போண்டாவை ருசித்துச் சாப்பிட்டார் பாபா. பொட்டலத்தில் கட்டப்பட்டிருந்த மெல்லிய நூலை ஞாபகமாகத் தன் ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொண்டார். போண்டா சாப்பிட்டு முடித்ததும் அந்த நூலை தான் தங்கியிருந்த மசூதியின் வெளியே தள்ளித் தள்ளி இருந்த இரு தென்னை மரங்களின் இடையே இணைத்துக் கட்டினார். அப்போது அங்கே நீதிபதியையும், பாபாவையும் தவிர வேறு யாருமில்லை. அந்த நூலால், இரண்டு தென்னை மரங்களை இணைத்துக் கட்ட வேண்டிய அவசியமென்ன என்று நீதிபதிக்குப் புரியவில்லை. நான் ஓய்வெடுக்கப் போகிறேன். நீங்கள் புறப்பட்டுப் போவதானால் போகலாம்! என்றார் பாபா. அடுத்த கணம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்து நீதிபதிக்குக் கிறுகிறுவென்று தலை சுற்றியது….!

Leave a comment