ஷிர்டி பாபா பகுதி -21

Sai Baba
5/5 - (4 votes)

கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதும், அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும்தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது. பாபாவின் லீலைகள் பல்லாயிரம். அவற்றின் சூட்சுமம் அறிந்தவர் யார்? கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்தார். அன்று காலை சமைத்த உணவின் மீதி. இது இப்போது தன் கண்ணில் மீண்டும் மீண்டும் படுவானேன்? பாபாதான் இக்காட்சியைத் தனக்குக் காட்டுகிறாரோ? உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று, பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.

ஆனால், பாபாவின் சாம்ராஜ்யத்தில் என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கும்.  கடலிலிருந்து அருவி நீர்,  மலைமேல் ஏறிப் போனாலும் போகும். நெருப்பைத்  தொட்ட அன்பர்களுக்கு, பாபா நினைத்தால் அது கூட குளிர்ச்சியாகத் தான் இருக்கும். எனவே, தன் வியப்பிலிருந்து விடுபட்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்திருந்த தயிர் சோற்றை வைத்தார். அது எத்தனை நாள் பசியால் தவித்ததோ? பாய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவில், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அருகாகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார். பழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்பதை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய், நிரந்தரமாகத் தன் உடலிலிருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது. மருத்துவர்களும் அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள்.

கண்பத்தின் இரு கைகளும் அளவற்ற பக்தியோடு பாபாவை நோக்கிக் குவிந்தன. இந்த நிகழ்வின் பின்னணி என்ன சொல்கிறது? பாபாவின் செயமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை தான். ஆனால், அவற்றின் பின்புலத்தில் நாம் எளிதில் கண்டுணர இயலாத ஓர் ஆன்மிக விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது ஆன்மிக விஞ்ஞானத்தின் அடிப்படை விதி. மூட நம்பிக்கைகளின் தொகுப்பாக, இன்றிருக்கும் பல ஆன்மிக விஷயங்கள் மாறிப் போனாலும், உண்மையான ஆன்மிகம் என்பது, உளவியல் சார்ந்த விஞ்ஞானம்தான் என்பதை அடியவர்களின் வாழ்வு நமக்குத் தொடர்ந்து உணர்த்தி வருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்ச்செயல் உண்டு என்கிறது பவுதிகம் சார்ந்த நியூட்டனின் மூன்றாம் விதி. இது பவுதிக விதி மட்டுமல்ல, நம் வாழ்க்கை விதியும் கூட. ஒருவருக்கு ஆயுள் நூறு என்று வைத்துக்கொள்வோம். அவர் வாழ்வின் முற் பாதி  என்பது முதல் ஐம்பது ஆண்டுகள். பிற்பாதி என்பது அடுத்த ஐம்பது ஆண்டுகள். முதல் பாதியில் அவர் செய்த நற்செயல்கள்மற்றும் தீய செயல்களின் விளைவுகளைத் தான் அவர் தன் வாழ்க்கையின் பிற்பாதியில் அனுபவிப்பார்.

முதல் பாதியில் முயன்று கல்வி கற்றதின் விளைவையும் கடினமாக உழைத்ததின் விளைவையும் பிற்பாதியில் அவர் பொருளாதாரப் பலனாகப் பெறுவார். முதல் பாதியில் கெட்ட பழக்கங்களால் அவர் பீடிக்கப்பட்டிருந்தால் பிற்பாதியில் நோய் அவரைத் தாக்கும். இதை சொந்த அனுபவத்திலும், பிறரைப் பார்த்தும் நாம் உணரலாம். ஆனால், எல்லா நிகழ்வுகளையும் இப்படிப் பொருத்திப் பார்த்து விடை கண்டுவிட  இயலாது. ஒருவருக்கு ஆடிசம் குறைபாடுள்ள குழந்தை பிறக்கிறது. நல்ல பழக்கங்கள் மட்டுமே கொண்டுள்ள இன்னொருவருக்குப் புற்றுநோய் வருகிறது. இதற்கெல்லாம் ஆன்மிக விஞ்ஞானம் என்ன விடை சொல்கிறது? இவர்களைப் பொறுத்தவரை முற்பாதி என்பது முற்பிறவி. பிற்பாதி என்பது இந்தப் பிறவி. முற்பிறவியின் நன்மை தீமை ஆகிய இருவினைகளின் பலன்களையும் அவர்கள் இந்தப் பிறவியில் அனுபவிக்கிறார்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல கெட்ட பழக்கங்கள் உடைய ஒருவர் நீண்ட ஆயுளோடு இந்தப் பிறவியில் வாழ்கிறார் என்றால், முற்பாதியான  முற்பிறவியில் அவர் செய்த நல்வினைகளின் பலனை பிற்பாதியான இந்தப் பிறவியில் அவர் அறுவடை செய்கிறார் என்றே கருதவேண்டும். கண்பத் அந்த நாயை முற்பிறவியில் பட்டினி போட்டாரோ என்னவோ?

அந்த நாய் அவரிடம் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்து உரிய ஊதியம் கொடுக்கப்படாமல் வருந்தியதோ என்னவோ? யாரறிவார்? அந்தப் பாவத்தின் காரணமாக இப்பிறவியில் கண்பத்திற்கு வந்த மலேரியா, அந்த நாய்க்குத் தயிர்ச்சோறு கொடுத்தவுடன் விலகியதோ? ஒருவரின் முற்பிறவியைக் கூடக் கண்டுணரும் வல்லமை பெற்ற சித்தர் அல்லவா பாபா? இப்படியெல்லாம் பலவிதமாக யோசித்து பக்தியில் நெகிழ்ந்தார் கண்பத். பாபாவின் இன்னொரு லீலையை உற்று நோக்குவோம்.ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர், நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேட் என்ற இடத்தில் வசித்தவர். பெரும் செல்வந்தரான அவருக்குப் புத்திர பாக்கியம் அமையவில்லை. மனம் வருந்திய அவர், தம் நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் ஷிர்டி சென்று பாபாவை தரிசிக்க முடிவுசெய்தார். பாபாவுக்குத் தட்சணையாகக் கொடுக்க வென்று ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டார். பாபாவைச் சந்தித்து மெய் மறந்து அவர் வழிபட்டபோது, பாபா அவரிடம் தட்சிணை கேட்டார். நீ ஐந்து ரூபாய் கொடுக்க எண்ணியிருக்கிறாய். ஆனால், ஏற்கனவே எனக்கு நீ மூன்று ரூபாயும், பதினான்கு அணாவும் கொடுத்துவிட்டாய். மீதித் தொகையை இப்போது கொடு! என்றார். வாடியாவுக்கு வியப்பு! இவரை இப்போது தானே முதன் முதலாக தரிசிக்கிறோம்…ஆனால், ஏன் இப்படி சொல்கிறார்…வியப்பு விலகாவிட்டாலும், அவர் கேட்டபடியே மீதித் தொகையைக் கொடுத்தார். முதன் முறையாக ஷிர்டி வரும் அவர் எப்படி முன்னரே தட்சணை கொடுத்திருக்க முடியும்? ஆனால். மிக விரைவில் அது எப்படி என்ற விவரம் வாடியாவுக்குப் புரியவந்தபோது. அவர் மனம் மலைப்பில் ஆழ்ந்தது.

Leave a comment