வித்யாதரன் முக்திக்குப் பின் ஒரு நாள் இனிமையான இரவில் எண்ணற்ற பலசாலிகளான பலராமரும் கிருஷ்ணரும் விருந்தாவனக் காட்டிக்குச் சென்றார்கள். அவர்களுடன் விரஜ பூமியின் நங்கையரும் சென்றிருந்தார்கள். அந்நங்கையர் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சந்தனம் பூசப் பெற்று, மலர்களால் தம்மை அலங்கரித்திருந்தார்கள். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரங்கள் புடை சூழப் பிரகாசித்துக் கொண்டிருந்தான். சூழலின் இனிமையில் கிருஷ்ணரும் பலராமரும் இனிமையாகப் பாடினார்கள்.
அப்போது குபேரனின் நண்பனான ஒரு அசுரன் அங்கு தோன்றினான். அவன் தலையில் சங்கு வடிவிலான விலை உயர்ந்த மணியைத் தரித்திருந்ததால் அவனுக்கு சங்காசுரன் என்ற பெயர் வழங்கியது. குபேரனின் இரு மகன்கள் செல்வத்தால் செருக்கடைந்து நாரத முனியை அசட்டை செய்தது போல் சங்காசுரனும் செல்வச் செருக்கு காரணமாக, கிருஷ்ணரையும் பலராமரையும் ஆயர்குலச் சிறுவர்களென எண்ணினான். சங்காசுரன், தான் செல்வம் மிகுந்தவனும், குபேரனின் நண்பனுமாகையால் அங்கிருந்த விரஜ நங்கையர்களை அனுபவிக்க எண்ணி அப்பெண்களைக் கைப்பற்ற விரும்பினான்.
அவர்களிடையே அவன் தோன்றி, அப்பெண்களை வடக்கு திசையை நோக்கி கடத்திச் செல்லலானான். கிருஷ்ணரும் பலராமரும் இருந்தும்கூட சங்காசுரன் தானே அவர்களின் கணவன், உடைமையாளன் என்பது போல் அதிகாரம் செய்தான். சங்காசுரனால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள், தம்மைக் காப்பாற்றும்படி கிருஷ்ணரையும் பலராமரையும் பெயர் சொல்லிக் கூவியழைத்தார்கள். சகோதரர்கள் இருவரும் பெரிய கட்டைகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு விரைவாக சங்காசுரனைப் பின் தொடர்ந்தார்கள்.
அவர்களின் பலத்தை எண்ணி அஞ்சிய சங்காசுரன், கோபியர்களை விட்டுவிட்டு உயிருக்குப் பயந்து ஓடினான். ஆனால் கிருஷ்ணர் அவனை விடவில்லை. கோபியர்களை பலராமரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கிருஷ்ணர் அசுரன் சென்ற இடமெல்லாம் அவனைத் துரத்திப் பிடித்து, அவனின் தலையில் தன் முஸ்டியால் அடித்து, அவனைக் கொன்றார். பின்னர் அவனின் தலையில் இருந்த சங்கு வடிவிலான மணியை எடுத்துக் கொண்டு திரும்பினார். விரஜ பூமியின் நங்கையர்களின் முன்னிலையில் கிருஷ்ணர் அம்மணியைத் தம் சோதரனான பலராமருக்கு அளித்தார்.
Category: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
No Comments