பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது சுதாமா என்ற பெயருடைய பூக்கடைக் காரரிடம் சென்றார்கள். அவர்கள் கடையை அணுகியதும் பூ வியாபாரி வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின், கிருஷ்ணரையும் பலராமரையும் தகுந்த ஆசனங்களில் இருக்கச் செய்து, உதவியாளர்களைப் பூவும் தாம்பூலமும் கொண்டு வரும்படி பணித்தார். வியாபாரியின் வரவேற்பால் கிருஷ்ணர் மிகவும் திருப்தி அடைந்தார்.
மிகுந்த பணிவுடன் பூ வியாபாரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்: அன்பான பிரபுவே, நீர் என் இருப்பிடத்துக்கு வந்திருப்பதால் என் மூதாதையர்களும், வணக்கத்துக்குரிய பெரியவர்களும் முக்தி அடைந்தவர்களாக வேண்டும். இப் பிரபஞ்சத்தில் காரணங்களுக் கெல்லாம் காரணமானவர் நீரே. ஆனால் உமது பக்தர்களைப் பாதுகாத்து, அசுரர்களை அழித்து, இவ்வுலக வாசிகளுக்கு நன்மையளிப்பதற்காக உமது சக்திகளுடன் நீர் வந்திருக்கிறீர்.
நண்பரென்ற முறையில் எல்லா உயிர் வாழிகளையும் சமமாக நோக்குகிறீர். நீர் பரமாத்மா. நண்பன் – பகைவன் என்ற வேறுபாடு உமக்கில்லை. என்றாலும் உமது பக்தர்களுக்குப் பக்தியில் சிறப்புப் பலன்களை நீர் வழங்குகிறீர். பிரபுவே, நான் என்ன செய்ய வேண்டும், கட்டளையிடும். நான் உமது நிரந்தர சேவகன். ஏதாவது செய்ய நீர் அனுமதித்தால் நான் தன்யனாவேன். இவ்வாறு சுதாமா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்.
கிருஷ்ணரும் பலராமரும் தன் இருப்பிடத்தில் வரப்பெற்ற சுதாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால் தனக்கு மிகவும் பிடித்தமான மலர்களைக் கொண்டு மிக அழகாக இரண்டு மாலைகளைத் தொடுத்து அவர்களுக்கு அர்ப்பித்தார். அவருடைய உண்மையான பக்தித் தொண்டை கிருஷ்ணரும் பலராமரும் மெச்சினார்கள்.
சரணடையும் ஆத்மாக்களுக்குத் தாம் எப்போதும் வழங்கும் ஆசிகளைக் கிருஷ்ணர் சுதாமாவுக்கு வழங்கினார். சுதாமா, தாம் எப்போதும் கிருஷ்ணரின் நிரந்தர சேவகராக இருக்க வேண்டுமென்றும், அப்படிப்பட்ட பக்தித் தொண்டின் மூலம் பிற உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். பூ வியாபாரியிடம் திருப்தியடைந்த கிருஷ்ணர், அவர் வேண்டிய வரங்களுக்கான ஆசிகளை நல்கியது மட்டுமன்றி அதற்கும் மேலாக எல்லா சுக போகங்களையும், நீண்ட ஆயுளையும் வழங்கினார்.
Category: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
No Comments