சுவாமி விவேகானந்தர் கதைகள் – கடமையைச் செய், உயர்வை அடைவாய்!

3.9/5 - (18 votes)

கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம்! கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்துகொண்டேன். இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.

அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக்கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து, வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து, இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்.

Leave a comment