ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.
விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு “இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது” என்றார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். “உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம்
இருக்கிறது” என்றார் தெனாலிராமன். ராஜகுருவோ சற்று முறைப்பாக “ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை
உண்பதே தனி சுகம் தான்” என்றார்.
தெனாலிராமனோ “கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்” என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம்
கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.
அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். “அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே” என்றார்.
தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
Category: தெனாலிராமன் கதைகள்
One Comment