தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன.
ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று.
விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார்.
நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன்.
அவரிடம், சோதிடர், “உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்” என்றார்.
அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், “உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.
ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான்.
சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை.
சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார்.
நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்” என்றான்.
முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் “நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
“குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும், முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்” என்றான்.
“ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்” என்றார். “வேண்டாம் குருவே!” என்ற சுகுமாரன் “அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்” என்றான்.
சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர்.
இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார்.
அதற்கு சுகுமாரன் “குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார்.
அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், “தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்” என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, “ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!” என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார்.
அதற்கு நம்பி, “என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா!” என்று தொடர்ந்த நம்பி, “நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான்.
நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறினான். அதனால் என்று நினைக்கிறேன். ஆனால் மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியின் யோசøயை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட! சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்று எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும்.
“சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான்.
விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் புகுந்து இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
Category: விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்
No Comments