கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.
“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.
இளைஞனின் அம்மாவிடம் “அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவனாகிவிடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.
சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது.
“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்ற கவலையால் இளைஞன் பலமிழந்தான். கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.
Category: அப்பாஜி கதைகள்
One Comment