தினசரி அதிகாலையில் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் தொழிலாளி ஒருவன் அரண்மணைக்கு வருவது வழக்கம். தினசரி காலையில் முகத்தை மழித்து முடியைத் திருத்துபவராதலால் அந்தத் தொழிலாளியிடம் வேடிக்கையாக எதையாவது பேசுவது கிருஷ்ணதேவராயரின் வழக்கம். அவனும் மன்னர் கேட்கும் கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலுரைப்பான்.
ஒருநாள் அவன் கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருக்கும் போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்றே. நமது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்று உனக்குத் தெரிந்திருக்குமே என்றார். ”
மேன்மை தாங்கிய மகாராஜா அவர்களே! தங்களுடைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர். மக்களின் ஒவ்வொருவர் இல்லத்தில் குறைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவலையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்தொழிலாளி. சவரத் தொழிலாளி சென்ற பின்னர் எப்போதும் போன்று மன்னரைக் காண அப்பாஜி வந்தார்
அப்பாஜியிடம் சவரத் தொழிலாளி கூறியதை மன்னர் கூறினார். ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் சொன்னது போன்று எப்படி எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு பொன் என்பது சாதாரண மக்கள் வைத்திருக்க முடியாது! பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும். ஆகையினால் இதுபற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்!” என்று வினவினார்.
”இதற்கு விரைவில் விடையைக் கூறுகிறேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். மறுநாள் வழக்கம்போல் சவரத் தொழிலாளி அரண்மனைக்கு வந்து கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழித்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் அப்பாஜி, காவலர்களை அழைத்து ”சவரத் தொழிலாளியின் இல்லத்தை சோதனை செய்துவிட்டு விரைவில் வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.
காவலர்கள் சவரத் தொழிலாளியின் இல்லத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு பொன் இருப்பதைக் கண்டு வந்து கூறினர். அத னை மன்னரிடம் கொடுத்துவிட்டு, மன்னர் பெருமானே! அடுத்த நாள் சவரத் தொழிலாளி வந்ததும், முதலில் கேட்டது போன்று கேளுங்கள். அவனிடமிருந்து வேறு விதமான பதில் கிடைக்கும்” என்றார் அப்பாஜி.
வழக்கம் போல் காலை கிருஷ்ணதேவராயருக்கு முகம் மழிக்க சவரத் தொழிலாளி வந்தமர்ந்தான். வரும்போதே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது வேலையை ஆரம்பிக்கும் சமயம்,
”இப்பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?” என்று வினவினார் மன்னர்.
”பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்களே! அதை ஏன் கேட்கின்றீர்கள்? எல்லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத் தொழிலாளி கண்களில் நீர் மல்க தொண்டை அடைக்கக் கூறினான்.
அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் பெருமானே! இப்போது விடை தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நிலையை நிர்ணயிக்கின்றனர். தன்னைப் போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நினைக்கின்றனர்.
தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநிலையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி. உடனே காவலனை அழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு பொன்னைக் கொண்டு வந்து சவரத் தொழிலாளியிடம் கொடுங்கள்” என்று ஆணையிட்டார் மன்னர்.
கொண்டு கொடுத்த பொன்னுடன் சிறிது பொன்னும் பரிசாகச் சவரத் தொழிலாளிக்குக் கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் வாங்கிச் சென்றான். மனித இயல்பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திறமையைப் பாராட்டினார் கிருஷ்ணதேவராயர்.
Category: அப்பாஜி கதைகள்
No Comments